தமிழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்கள் வழங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க, இன்று (பிப். 26) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஒரு ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர் உடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாரட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணையினை வழங்கினார்.

இவ்விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE