மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்... 10 ஆண்டாக அதிகாரிகளுக்கு ஆழ்ந்த தூக்கமா? - ஐகோர்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கட்டப்படும் கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயில் சுவரில் இருந்து கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர வரம்பாக 9 மீட்டர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மீறி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயரமான கட்டிடங்களால் பக்தர்களால் கோயில் கோபுரங்களை தரிசிக்க முடியவில்லை. எனவே, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர்களை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது.

வழக்கறிஞர் ஆணையர்கள் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் மொத்தம் 547 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 525 கட்டிடங்கள் 9 மீட்டருக்கும் மேல் உயரமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “அரசின் உயரக் கட்டுப்பாடு அரசாணையை மீறி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.

மதுரை மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடந்து வருகிறது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தால் பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

9 மீட்டருக்கு மேல் உள்ள கட்டிடம், அனுமதியற்ற கட்டுமானம், விதிமீறல் கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி ஆவணங்களில் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. தற்போது வரை 9 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, ''மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிபெறாமல் விதிமீறல் கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்களா? விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணியாகும். ஆனால், நோட்டீஸை அனுப்பிவிட்டு மேல் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனர்.

இந்த வழக்கில் உள்ளூர் திட்டக்குழுமத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு 1997-க்கு முன்பு மதுரை மாநகராட்சி நிர்வாகம் எத்தனை அனுமதி வழங்கியது? 1997-க்கு பிறகு உள்ளூர் திட்ட குழுமம் எத்தனை அனுமதி வழங்கியது? விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஏப்ரல் 4-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE