வரலாற்று சின்னங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் இன்று திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் வரலாற்று சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு நடைபெறும் திறப்பு நிகழ்வுகளில் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இம்மண்ணைவிட்டு சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். 80 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்தார். இனம் காக்க போராடினார். மொழி காக்க சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதல்வர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீன தமிழகத்தை தன் சிந்தனை உளியால் செம்மையுற செதுக்கினார். எதிர்கால தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்தார்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுக எனும் அரசியல் பேரியக்கம், தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அண்ணா மறைந்த நிலையில், முதல்வரானார் கருணாநிதி.

வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட, 1969-ல் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்து கொடுத்தார். ஓங்கி உயர்ந்த தூண், அணையா விளக்கு கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தார். மாற்று இயக்க தலைவர்கள் மறைந்தபோதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர். மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடங்களை அமைத்தார்.

எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலை காலத்தில், காமராஜர் மறைந்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதி, கிண்டியில் உள்ள இடத்துக்கு இரவில் சென்று, அரசு மரியாதையுடன் காமராஜர் உடலை எரியூட்டச் செய்து, ராட்டை சின்னத்துடன் நினைவிடம் அமைத்தார். ராஜாஜி நினைவிடத்தை ராமரின் பட்டாபிஷேக மகுடம்போலவும், எம்ஜிஆர் நினைவிடத்தில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்ததும் கருணாநிதிதான்.

ஆனால், கருணாநிதி விரும்பியபடி, கடற்கரையில் அண்ணாவின் அருகில் ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. சட்டப் போராட்டத்துக்கு பிறகு, கடற்கரையில் இடம் ஒதுக்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்கினேன். தமிழ், தமிழக வளர்ச்சி, தமிழர்களின் உயர்வுக்காக உழைத்த கருணாநிதி ஓய்வுகொள்ளும் இடத்தை ஒரு வரலாற்று சின்னமாக கட்டியமைக்க செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவேந்தல் வரும் முன்பு அப்பணி நிறைவடைந்துள்ளது.

அண்ணா சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் தமிழகம் பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்கால தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்று சின்னமாக நினைவிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர்களின் ஓய்விடங்கள் பிப்ரவரி 26-ம் தேதி (இன்று) இரவு 7 மணிக்கு திறக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில், அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE