‘தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை’ - திமுக தொகுதி பங்கீடு பேச்சு; மார்க்சிஸ்ட் கம்யூ. கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. இணக்கமானதாக இருந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. விரைவில் நல்ல உடன்பாடு வரும்” என்று திமுக உடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் கூறியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவினர் கூறியதாவது: இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. இணக்கமானதாக இருந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. விரைவில் நல்ல உடன்பாடு வரும். எனவே விரைவில் நல்ல செய்தியை கூறுவோம். பேச்சுவார்த்தையில் எந்த நெருடலும் இல்லை. ரொம்ப இணக்கமாக மனந்திறந்து பேசினோம்" என்று கூறினா்.

முன்னதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை கையெழுத்தானது.

இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. யார் போட்டியிடுவார் என்பது குறித்து செயற்குழு முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல், மதிமுக சார்பில் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றைய தினம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் தற்போதைக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பிறகு ஆலோசிக்கலாம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE