அடையாறு ஆற்றில் மழைநீர் வெளியேறுவதைத் தடுக்க ஷட்டர்கள் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும்: அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: “அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மழைநீர் வெளியேறாமல் ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும்” என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில் 03.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில் “டிசம்பர் 2023ல் நிகழ்ந்த இரட்டைப் பேரிடர்களின் படிப்பினைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் (Learning from Twin Disasters of December 2023 and Way Forward)” குறித்த ஒரு நாள் கருத்து பரிமாற்றப் பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் தலைமைச் செயலாளர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (பிப்.25) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிருகம்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் சுமார் ரூ.180 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும். இந்தப் பணிகள் முடிக்கப்பட்டால் போரூர் ஏரி மற்றும் மேற்குப் பகுதியிலிருந்து வரும் வெள்ளநீர் இந்த வடிகால்கள் வழியாக நேரடியாக அடையாறு ஆற்றில் சென்றடையும். இந்தப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு இருக்காது.அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மழைநீர் வெளியேறாமல் ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும்.

மேலும், சென்னை மாநகரத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சில பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு மழைநீர் வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்காலிகமாக அங்கு குழாய் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இங்குப் பணிகள் தொடங்கப்பட்டு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்படும். மழை முடிந்தவுடன் எங்கெங்கு பணிகள் முடிக்கப்பட வேண்டும் எனக் கண்டறிந்து, அங்கு பணிகளை விரைவில் தொடங்கி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE