கறார் காட்டும் இபிஎஸ்... தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க இடங்களை ஒதுக்க அதிமுக திட்டம்?

By நிவேதா தனிமொழி

14+1 கேட்ட பிரமலதா... ஆனால், 5 போதும் என கறார் காட்டிய அதிமுக. கூட்டணி பின்னணி என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மக்களவைத் தேர்தல் அறிவித்தப்பின் அதிமுக தலைமையிலான கூட்டணியை அறிவிப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுகவின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நத்தை வேகத்தில் நடந்து வந்தது. தற்போது, அது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீடுகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

தேமுதிக - அதிமுக கூட்டணி நிலை என்ன? - தேமுதிகவின் செயற்குழு கூட்டத்தில் 14 தொகுதிகளை + 1 ராஜ்ய சபா சீட் யார் ஒதுக்குகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம் எனப் புயலைக் கிளப்பினார் பிரமலதா விஜயகாந்த். குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டில் போட்டியிட்ட தொகுதி எண்ணிக்கைதான் இவை. இருந்தாலும், அப்போது இருந்த காட்சிகள், இல்லை, கட்சியின் வலிமை ஏற்றாற்போல் தொகுதிகளைக் கேட்க வேண்டுமென விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், நிர்வாகிகளின் ஆசையைத்தான் பேசினேன் எனப் பின்வாங்கினார்.

இந்த நிலையில், அதிமுக - தேமுதிக இடையே நடைப்பெற்ற தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் அதிமுக ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியுள்ளது.

தேமுதிகவைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக தொடக்கம் முதலே காய்களை நகர்த்தி வந்தனர். விஜயகாந்துக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டதைப் பிரமலதா வரவேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், காலம் கடந்து அறிவிப்பு என வருத்தம்தான் தெரிவித்தார். இதனால், ‘பாஜக முன்வைத்த அனைத்து அழைப்புகளையும் பிரமலதா நிராகரித்துவிட்டார்' என சொல்லப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மிகவும் குறைந்த இடங்களை அதிமுக ஒதுக்க முன்வந்திருக்கிறது. எனினும், அதிகாரபூர்வமாக குழுக்கள் அமைத்து இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.

மாநிலங்களவை சீட் மறுக்கும் அதிமுக! - ஒரு மாநிலங்களவைத் தொகுதியைத் தேமுதிக கேட்டது. ஆனால், மாநிலங்களவையை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுகிறது. அந்த சீட்களை அதிமுக வசம் வைத்துக்கொள்ள நினைக்கிறது. இதனால், இந்த விசயத்திலும் முரண்பாடு நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 4 இடங்களில் தேமுதிக போட்டியிருந்தது. குறிப்பாக, வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது. அதில், வெற்றி பெறவில்லை என்றாலும் இரண்டாம் இடத்தை 4 தொகுதிகளிலும் தக்கவைத்தது தேமுதிக கட்சி.

இம்முறை கள்ளக்குறிச்சியில் மீண்டும் சுதீஷ் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், விருதுநகர் தொகுதிக்குப் பதிலாக மதுரை தொகுதியில் விஜய் பிரபாகரனை களமிறக்க பிரமலதா திட்டமிட்டிருக்கிறார். ஆனால், மதுரை தொகுதியில் அதிமுக பலமுறை வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 2014 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் தேமுதிக 3-வது இடத்தை இந்தத் தொகுதிகளில் பிடித்திருக்கிறது. இதன் அடிப்படையில் தேமுதிகவுக்கு அந்த இடத்தை அதிமுக ஒதுக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மார்ச் 8-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதன்பின் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது அதிகாரபூர்வமாக தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE