ரூ.10-க்கு 3 இட்லி... ஏழைகளுக்கு உதவும் ‘மோடி இட்லி’ உணவகம் - சென்னையில் பாஜகவினர் அசத்தல்

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை கே.கே.நகர் (மேற்கு) முனுசாமி சாலையில் ‘மோடி இட்லி’ உணவகத்தை தென் சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கே.பி.நாகராஜன் ஒத்துழைப்புடன், மண்டலத் தலைவர் ஜி.கோபிநாதன் நடத்தி வருகிறார்.

இங்கு ரூ.10-க்கு 3 இட்லியும், ஐந்து ரூபாய்க்கு ஒரு வடையும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வேலைக்கு செல்வோர், தொழிலாளிகள், சாலையோரம் வசிப்பவர்கள் ‘மோடி இட்லி’ உணவகத்தில் சாப்பிட்டுச் செல்கின்றனர். வாரத்தில், சனி, ஞாயிறு தவிர்த்து 5 நாட்கள் செயல்படும் இந்த உணவகம் மூலம், 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இங்கு இட்லி விற்பனை செய்யப்படுகிறது.

ஜி.கோபி நாதன்

இது தொடர்பாக ‘மோடி இட்லி’ உணவகத்தை நடத்தி வரும் தென் சென்னை மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் ஜி.கோபி நாதன் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மோடி இட்லி’ உணவகத்தைத் தொடங்கினோம். ஒரு நாளைக்கு பார்சல் உள்பட 80 பேர் சாப்பிடும் அளவுக்கு தயாரிக்கிறோம். சுமார் 280 இட்லி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் லாபம் எல்லாம் கிடையாது. மன நிறைவு மட்டும் தான். ஆரம்பத்தில் இங்கு யாரும் சாப்பிட வர மாட்டார்கள். நிறைய நாட்கள் இட்லி வீணாகி இருக்கிறது. பிறகு ஒவ்வொரு தவறையும் சரி செய்யத் தொடங்கினோம். இப்போது, இட்லி மளமளவென விற்பனையாகி விடுகிறது. விரைவில், விருகம்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘மோடி இட்லி’ உணவகத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கே.பி.நாகராஜன்

தென் சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கே.பி.நாகராஜன் கூறும் போது, அம்மா உணவகம் சரிவர இயங்காததுதான் ‘மோடி இட்லி’ தொடங்க எங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. எங்களது நண்பர்கள், கட்சிக்காரர்கள், தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் மாலையில், சப்பாத்தி உள்ளிட்டவற்றை மலிவு விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அருள்

கே.கே.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள் கூறும்போது, இங்கு காலை உணவு அருமையாக உள்ளது. மலிவான விலையில் நல்ல உணவு வழங்குவது பாராட்டுக்குரியது. பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு இங்கு வந்து வேலை செய்யும் எங்களைப் போன்றோருக்கு இது போன்ற உணவகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.

ஏ.கஸ்தூரி

தொழிலாளி ஏ.கஸ்தூரி கூறும்போது, வேலைக்கு சீக்கிரமாகவே செல்வதால், பல நேரங்களில் வீட்டில் சமைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் காலை உணவு சாப்பிடாமலேயே வேலைக்குச் சென்று விடுவேன். தற்போது இங்கு அடிக்கடி காலையில் சாப்பிடுகிறேன். விலையும் குறைவு. வீட்டில் இருப்பவர்களுக்கும் பார்சல் வாங்கிச் செல்கிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE