“பாஜகவுடன் திமுகவுக்கே ரகசிய உடன்பாடு... அதிமுகவுக்கு இல்லை!” - இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி, இன்று (பிப்.24) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். “தமிழக உரிமைகளை பெற்று தர மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் பாடுபடுவோம். இன்று முதல் இரவு - பகல் பாராமல் மக்களை சந்தித்து இரட்டை இலையை வெற்றியடைய செய்வோம்” என்று உறுதியேற்கும்படி தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தினார்.

பின்னர் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்.

பாஜகவுடன் திமுகவுக்கு தான் ரகசிய உடன்பாடு இருக்கிறது. அதிமுகவுக்கு இல்லை. அண்மையில் கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்வு நடந்தது. அதற்கு பிரதமரை வரவழைத்தார்கள். அன்று ‘கோ பேக்’ மோடி என்றார்கள் இன்று ‘வெல்கம் மோடி’ எனக் கூறுகிறார்கள். இதுதான் ரகசிய உடன்பாடு.

காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது 22 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கச் செய்தனர் அதிமுக எம்.பி.க்கள். எங்கள் எம்.பி.க்கள் 16,619 கேள்விகள் எழுப்பினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9,695 கேள்விதான் எழுப்பி உள்ளனர். அதிமுக எம்.பி.க்களை வெற்றி பெறச் செய்தால் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வர காரணமாக இருந்தது காங்கிரஸ், திமுகதான். ஒரு கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று கூறிய திமுக இன்று லட்சக்கணக்கான பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நீட் ஒழிப்புக்கு ஏதும் செய்யவில்லை. திமுக அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. வீட்டு மக்கள் மீதுதான் கவலை. ஆனால் நாங்கள் நாட்டு மக்களுக்காகத் தான் நாங்கள் உழைக்கிறோம்” என்று அவர் கூறினார்.

லோகோ வெளியீடு: மக்களவைத் தேர்தலை ஒட்டி பிரசாரத்திற்காக, லட்சினையை வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதில், ‘தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோவையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் ஜெயலலிதாவின் குரலில் மத்திய, மாநில அரசுகளை சாடி கருத்துகள் இடம்பெற்றிருந்தன. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்துங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுப்பதுபோல் அந்த ஆடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை முழுமையாக வீழ்த்தி, தமிழக முதல்வரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும்” என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: ‘பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வீழ்த்த வேண்டும்’ - திமுகவின் 3 தீர்மானங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE