“கர்நாடக அரசின் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் பேசுவதா?” - ராமதாஸ் கண்டனம் @ மேகேதாட்டு விவகாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவ மன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர், கர்நாடக அரசின் குரலாக ஒலித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவ மன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடக அரசின் குரலாக ஒலித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது என்பது உண்மைதான். ஆனால், என்னைப் பொறுத்தவரை, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுக்கக் கூடாது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருக்கும் போது, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை யாரும் தடுக்கப்போவதில்லை.

இந்த சிக்கலில் இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்த நான் முயற்சி செய்வேன்’ என்று கூறியிருக்கிறார். அமைச்சரின் இக்கருத்தை ஏற்க முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகேதாட்டு அணை சிக்கலில் சட்டமும், உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்பும் என்ன சொல்கிறதோ? அதன்படித் தான் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரின் தனிப்பட்டக் கருத்தை யாரும் கேட்கவில்லை.

மேகேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் மிகத் தெளிவாக உள்ளன. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. இதை உச்ச நீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் உறுதி செய்திருக்கிறது. 1924-ஆம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திலும் இது உறுதி செய்யப்படுள்ளது. இதை செயல்படுத்துவது தான் மத்திய அரசின் பணியாக இருக்க வேண்டும்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சராக முன்பு பணியாற்றிய உமாபாரதி, இந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டு, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விண்ணப்பம் கர்நாடகத்திடமிருந்து வந்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். 09.06.2015 அன்று இது தொடர்பாக அப்போதைய பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், உமாபாரதி கடிதம் எழுதியிருந்தார்.

இப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தும் இந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொள்கிறார். ஆனால், அதற்குப் பிறகும் மேகேதாட்டு அணையை தடுக்கக் கூடாது என்று தனிப்பட்டக் கருத்தைக் கூற வேண்டிய தேவை என்ன? தமிழகம் & கர்நாடகம் இடையே நீதிபதியாக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர் ஷெகாவத், கர்நாடகத்தின் வழக்கறிஞராக மட்டும் செயல்பட வேண்டிய தேவை என்ன? என்பது தான் பாமக எழுப்ப விரும்பும் வினாவாகும்,

இதற்கு முன்பும் கூட தமது கர்நாடகப் பாசத்தை அமைச்சர் ஷெகாவத் வெளிப்படுத்தியிருக்கிறார். 05.03.2022 ஆம் நாள் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷெகாவத், ‘‘மேகேதாட்டு அணை விவகாரத்தை மத்திய அரசால் தீர்க்க முடியாது. ஆனால், மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என விரும்புகிறேன். மேகேதாட்டு சிக்கல் குறித்து இந்த ஆண்டிலிருந்து இரு மாநிலங்களும் பேச்சு நடத்தத் தொடங்கினால், நிச்சயமாக மேகேதாட்டு அணை சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்’’என்று கூறினார். கடந்த இரு ஆண்டுகளில் மேகேதாட்டு சிக்கலில் மத்திய அரசு எடுத்த முடிவுகள் கர்நாடகத்திற்கு சாதகமாகவே உள்ளன.

மேகேதாட்டு அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட்டதுடன், மேகாதாட்டு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்படைத்திருக்கிறது. இந்த முடிவுக்கு பின்னால் அமைச்சர் ஷெகாவத்தின் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

அதேபோல், மேகேதாட்டு அணை தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே இணைக்கம் ஏற்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் ஷெகாவத் கூறியிருப்பதும் தேவையற்றது ஆகும். இது தொடர்பாக பேச்சு நடத்தலாம் என்று மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது.

மேகேதாட்டு அணை தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. மேகேதாட்டு அணை சிக்கலில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு செயல்படும் என்று மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அறிவிக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்