மணல் குவாரி விவகாரம் | அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்குத் தொடர முடியும்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நேரிடும் என தெரிவித்து விசாரணையை பிப்.26-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசுநிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோதபணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைமேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மணல் குவாரிகளின் மொத்த ஏஜெண்டாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இடைக்காலத் தடை: அதையடுத்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பீலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத்துறை 5மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பினால், அந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்குத் தொடர முடியும்? எந்தசட்டத்தின் அடிப்படையில் தமிழகஅரசு இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளது? ஒருவேளை சம்மனை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாவட்டஆட்சியர்கள்தான் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். அல்லது சம்மனுக்கு பதிலளித்து இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு ஏன் இடையூறு செய்கிறது? இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்க வேண்டும், இல்லையென்றால் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க நேரிடும் என கருத்து தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹ்தகி, இந்த விஷயத்தில் கூட்டாட்சி முறையை அமலாக்கத்துறை ஒடுக்கப் பார்க்கிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதால்தான் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் எதற்காக பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை வரும் பிப். 26-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்