பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேர் ஓர் ஆண்டுக்குப் பின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேர், ஒரு வருடத்துக்கு பின்னர், வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று (பிப்.23) நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை அருகே பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண், சில இளைஞர்கள் மீது கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட காவல் துறையில் புகாரளித்தார். கோவை மாவட்டக் காவல்துறையினர் முதலில் விசாரித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), சதீஷ் (28), மணிவண்ணன்(25) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஹேரேன் பால்(29), பாபு என்ற பைக் பாபு(34), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை கடந்த 2021-ம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றினர். இவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்களை கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக கைதான 9 பேரும் இன்று (பிப்.23) கோவை மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி முன்பு நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அவர்களது முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நகல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையடுத்து 9 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரஸிங் முறையில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரும் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE