“அறநிலையத் துறை சரியாக செயல்படாததாக தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - சேகர்பாபு சாடல்

By செய்திப்பிரிவு

சோளிங்கர்: "அரசின் மீதும் எந்த விதமான குற்றங்களை கூற முடியாத காரணத்தால் அரசியலுக்காக சிறு பிரச்சினைகளைக் கூட ஊடகங்களிடம் பேசி அதில் ஒரு குழப்பத்தை விளைவித்து இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படவில்லை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மக்களிடம் பொய்த்து போகும்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (பிப்.23) ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தியின் (Rope Car) வெள்ளோட்ட நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: "கடந்த ஆட்சியில் முடிக்கப்படாமல் இருந்த ரோப் காரின் இதர பணிகளை உபயதாரர்களின் பங்களிப்போடு ரூ.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொண்டு, நரசிம்ம சுவாமிகளே மகிழ்ச்சி அடைகின்ற அளவுக்கு செய்து முடித்து, இன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளதற்கு காரணமான அமைச்சர் காந்திக்கு துறையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ரோப் கார் வெள்ளோட்டம் நிறைவுற்றவுடன், இதர சிறு பணிகளையும் முடித்து தமிழக முதல்வரின் பொற்கரங்களால் இந்த ரோப் கார் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வெகு விரைவில் அர்ப்பணிக்கப்படும்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழநி - இடும்பன் மலை, திருநீர்மலை, திருக்கழுகுன்றம், அனுவாவி திருப்பரங்குன்றம் மற்றும் கோர குட்டை போன்ற 6 இடங்களில் ரோப் கார் அமைப்பதற்குண்டான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு இருக்கின்றன. அதில் இரண்டு ரோப்கார்கள் அமைப்பதற்கு முதல்வர் இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கி இருக்கின்றார், அந்தப் பணிகள் வெகு விரைவில் தொடங்கும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் 40 சதவீதப் பணிகள் மட்டுமே முடிவுற்ற நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்காக திறக்கப்பட்ட அய்யர்மலை ரோப் கார் திட்டத்தில், தற்போது பக்தர்களுக்கான காத்திருப்பு கூடம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட இதரப் பணிகள் அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள் முன்னின்று மேற்கொண்டுள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த ரோப் காரும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

இந்த ஆட்சியில் முதியோர்கள், உடல் நலம் குன்றியவர்கள் இறைவனை சுலபமாக தரிசிப்பதற்காக தமிழக முதல்வர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை கண்டு பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் அனைத்து நிலைகளிலும் இறை தரிசனத்தை மேற்கொள்ளலாம். முக்கிய நாட்களில் வெளியூரிலிருந்து அதிகளவில் வருகின்ற பக்தர்கள் நலன் கருதி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளூர் பக்தர்களும் பொது வரிசை மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் தொடர்ந்து தரிசனம் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.

துறையின் மீதும், அரசின் மீதும் எந்த விதமான குற்றங்களை கூற முடியாத காரணத்தால் அரசியலுக்காக சிறு பிரச்சினைகளைக் கூட ஊடகங்களிடம் பேசி அதில் ஒரு குழப்பத்தை விளைவித்து இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படவில்லை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்களைப் பொறுத்தளவில் முதல்வரின் வழிகாட்டுதலோடு நடைபெறுகின்ற இந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை வெகுவாக பாராட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட துறை மேற்கொள்ளுகின்ற அறப்பணிகளை வெகுவாக பாராட்டியுள்ளனர். ஆகவே, குற்றச்சாட்டுகள் எல்லாம் மக்களிடம் பொய்த்து போகும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE