“அண்ணாமலை கூறுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - மாணிக்கம் தாகூர் எம்.பி

By என்.சன்னாசி

மதுரை: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகரில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “டெல்லி பத்திரிகைகளும் பாஜக கூட்டணியும் எதிர்பார்த்ததைப் போன்று அல்லாமல் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக கூட்டணியை உறுதி செய்கிறது.

சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியோடு தொகுதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கு பின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடும் பேச்சு நடக்கிறது. இந்தியா கூட்டணி தொடர்ந்து பலமானதாக இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மோடியின் ஆட்சி விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான ஆட்சி என்பது உறுதி ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் மதத்தை இழுப்பது, உரிமைக்காக போராடு கின்றவர்களை கொச்சைப் படுத்துவது பாஜகவின் வேலை.

டெல்லி ஊடகங்களும் பாஜக விஷயங்களை பெரிதுபடுத்த விரும்புவதில்லை. உண்மையில் விவசாயிகள் போராடுகின்றனர். போராட்டத்தின்போது, கடந்த முறை 72 விவசாயிகள் உயிரிழந்தனர்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு 70 சதவீத மானியம் வழங்குவதாக கூறுவது பொய் என அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். அண்ணாமலை உண்மை தவிர, எதுவும் கூறுவதில்லை. அவர் கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆளுநருக்கும், முதல்வருக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிவதில்லை.

பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிலோ அல்லது வேறு ஏதாவது 5 ஆண்டுக்கு முன் செயல்படுத்திய திட்டங்களின் நிறைவு விழாவிலோ பங்கேற்க தமிழகம் வந்தால் மகிழ்ச்சி. அவரது கட்சி நிகழ்வில் (என் மண் என் மக்கள்) பங்கேற்க வருகிறார். 9 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அடிக்கல் நாட்ட கிளம்பியுள்ளார். தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாறமாட்டார்கள். திமுக கூட்டணியில் எங்களது கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர். எத்தனை சீட் என்பதை விரைவில் தெரிவிக்கிறோம்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE