தேர்தல் ஆணைய ஆலோசனை | வாக்காளர் பட்டியல் முரண்பாடுகளை களைய அதிமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: “விருப்பு வெறுப்பின்றி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு, குளறுபடிகளை களைய வேண்டும்” என தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக கோரிக்கை விடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்த விதிமுறைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விருப்பு வெறுப்பின்றி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு, குளறுபடிகளை களைய வேண்டும் என்றோம். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு படை அதிகாரிகள் அதிகம் பணியமர்த்தி சுதந்திரமாக தேர்தல் நடத்தவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ளூர் காவல் துறை பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படும். பலமுறை இதனை சுட்டிக்காட்டியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனால் பாதுகாப்புக்கு உள்ளூர் காவல் துறையுடன் துணை ராணுவப் படை, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்தல் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர்களாக வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் உள்ளூர் அதிகாரிகளை பயன்படுத்த கூடாது. ஒவ்வொரு வாக்குச்சாவடியில் பதியப்படும் சிசிடிவி கேமராவுக்கான டெண்டரை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் வற்புறுத்தினோம்.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE