சென்னை: மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் பிப்.29 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது தலைமையிலான அதிமுக அரசு தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி, 16.2.2018-ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்காக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அப்போது முடக்கினார்கள். அதைத் தொடர்ந்து, 1.6.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத்தை மத்திய அரசு அறிவித்து, அதனை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.
காவிரி நடுவர் மன்றம் (Cauvery Water Disputes Tribunal) அளித்த தீர்ப்பினை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டு செயல்படுத்துவதற்காக மட்டும்தான் காவிரி மேலாண்மை ஆணையமும் (Cauvery Water Management Authority), காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் (Cauvery Water Regulation Committee) அமைக்கப்பட்டது. எனவே, இந்த ஆணையத்தின் பணிகளும், குழுவின் பணிகளும் முறையாக கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
காவிரி நதிநீரைத் தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்;காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல் மற்றும் அவற்றில் இருந்து நீரை பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல்; கர்நாடகம்-தமிழ் நாடு எல்லையில் பிலிகுண்டுலு நீர் அளவை நிலையத்தில் கர்நாடக அரசு நீர் வழங்குதலைக் கண்காணிப்பது, இவற்றைத் தவிர வேறு பணிகள் எதுவும் மேற்கொள்ள இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை.
» மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை திருப்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
» “ஒருவருக்கு ஒருவர் துணையாக...” - நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
2018-ஆம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சினை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்ற போது, அதிமுக அரசு 5.12.2018 அன்று மத்திய நீர் வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சி இருக்கும் வரை மத்திய நீர்வள கமிஷனோ, காவிரி மேலாண்மை ஆணையமோ மேகேதாட்டு பிரச்சினையை அதனுடைய கூட்டத்தில் கொண்டுவர முயற்சிக்கவில்லை. நாங்கள் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், எனது தலைமையிலான அதிமுக அரசு காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகம், தமிழகத்துக்குத் தரவேண்டிய பங்குநீரை உறுதி செய்தது.
இந்த திமுக ஆட்சியில், கடந்த 2024 பிப்.1 அன்று ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, மேகேதாட்டு அணை கட்டுவது பற்றிய விவாதத்தை 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் சேர்த்துவிட்டது.மேகேதாட்டு பற்றிய விவாதம் திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி சேர்க்கப்பட்டிருந்தால், தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு அல்லவா செய்திருக்க வேண்டும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தை அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், விவாதத்தில் கலந்துகொண்டு தமிழகத்துக்கு எதிரான ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்த திமுக அரசு ஏற்படுத்திவிட்டது. இப்போது, ஆணையமும் அதன் அதிகார வரம்புக்கு சம்பந்தமில்லாத மேகேதாட்டு அணை கட்டுவது குறித்த கருத்தை, மத்திய நீர்வள கமிஷனுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளார்.
28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் என்ன நடந்தது என்ற விவரங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு. ஆனால், விரிவான விளக்கமோ, பதிலோ சட்டமன்றத்தில் தெரிவிக்கவில்லை; விரிவான அறிக்கையும் வெளியிடவில்லை. தமிழக விவசாயிகளின் முக்கியமான, ஜீவாதார பிரச்சினையான, காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக அரசின் அலட்சியப் போக்கு, விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
காவிரியில் 2023-2024ஆம் ஆண்டு கர்நாடகம் நமக்குத் தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக இந்த திமுக அரசு பெறாததன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்து, சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு, இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் பயிர்க் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ரூ. 84,000 நிவாரணத்தையும் பெற முடியவில்லை.
தேசியப் பேரிடர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13,500-த்தில் இருந்து ரூ. 17,000-ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில், இந்த திமுக அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே அறிவித்திருந்தது. எனவே நான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.34,000 வழங்க வேண்டுமென்று பலமுறை இந்த திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், கிணற்றில் போட்ட கல்லைப் போல், இந்த திமுக அரசு, விவசாயிகளுக்கு நாம் வலியுறுத்திய நிவாரணத்தை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை இந்த திமுக அரசு பெறாததால், இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் பயிரைக் காப்பற்ற உயிர் தண்ணீராக, குறைந்தது 10 டிஎம்சி தண்ணீரையாவது விடுவிக்க டெல்டா விவசாயிகள் இந்த திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த அரசு தனது கூட்டாளி காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள பங்கு நீரைப் பெறவில்லை. எனவே, டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முடியாமல், வெறும் 2 டிஎம்சி தண்ணீரை மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காலம் கடந்து திறந்தது. இதனால் ஓரளவு மட்டுமே பயிர்கள் காப்பாற்றப்பட்டது.
காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடுக்கப்படும்; மேட்டூர் அணை வறண்டுவிடும்; டெல்டா பாசனப் பகுதி பாலைவனமாகிவிடும்; காவிரியை குடிநீர் ஆதாரமாக நம்பியுள்ள 20 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். காவிரி நதிநீர் ஆணையம், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான பொருளை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது, டெல்டா பாசன விவசாயிகளிடம் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பற்றி நான் தமிழக சட்டப் பேரவையில் பேசும்போது, நீர்வளத் துறை அமைச்சர் விரிவான பதிலை அளிக்கவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும்; கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் எனது தலைமையில், பிப்.29, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்களின் ஜீவாதார உரிமையை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுகவின் சார்பில் மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago