சென்னை: “மத்திய அரசு தனது வரிகள் மீது செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை (Cess and Surcharges) விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இந்தத் தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தத் தொகையை தானே வைத்து கொண்டு திட்டங்களை தீட்டுகிறது. 2021-22-இல் இந்த வரிகளின் மூலம் மத்திய அரசு 5.85 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. 2022-23-இல் 6.19 லட்சம் கோடி ரூபாய், 2023-24-இல் 6.5 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல் 6.95 லட்சம் கோடி ரூபாய்” என்று சட்டப்பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? - இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ஆம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம்.
மத்திய அரசு தனது வரிகளை மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. 10-வது நிதிக்குழுவில் 6.64 % என்று நமது பங்கை தொடர்ந்து குறைத்து, 15-வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாகக் குறைத்துள்ளது. தொடர்ந்து வரும் நிதிக்குழு நமது மாநிலத்துக்கு அநீதியை அளிக்கின்றன.
இது போதாதென்று, மத்திய அரசு தனது வரிகள் மீது மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை, அதாவது Cess and Surcharges,விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இத்தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இத்தொகையை தானே வைத்து கொண்டு திட்டங்களை தீட்டுகிறது. 2021-22 இல் cess and surcharge மூலம் மத்திய அரசு 5.85 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. 2022-23 இல் 6.19 லட்சம் கோடி ரூபாய், 2023-24 இல் 6.5 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல் 6.95 லட்சம் கோடி ரூபாய்.
» ‘ரயில்வே போலீஸ் நவீனப்படுத்த வேண்டும். ஏனெனில்...’ - இந்து முன்னணி
» அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
ஒரு கற்பனைக்கு, ஒருவேளை மத்திய அரசு, கூட்டாட்சித் தத்துவத்தை கடைபிடித்து இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், தமிழகத்துக்கு 2021-22 இல் 9,000 கோடி ரூபாய், 2022-23 இல் 10,300 கோடி ரூபாய், 2023-24 இல் 10,900 கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல் 11,600 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
இந்த அளவுக்கு, மாநில அரசின் பற்றாக்குறை, கடன்சுமை குறைந்திருக்கும். இது தமிழகத்தைச் சார்ந்த பிரச்சினை மட்டும் இல்லை. இது அனைத்து மாநிலங்களைச் சார்ந்த பிரச்சினை. மாநில அரசுகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் நாட்டுக்கே முன்னோடியாக திகழும் திமுக அரசு, மத்திய அரசு இந்த நியாயமற்ற முறையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
வருவாய் வரவினங்கள்: இந்த ஆண்டு, தொடர்ச்சியாக இரண்டு பேரிடர்களைச் சந்தித்ததால், 20.61 சதவீதம் என எதிர்பார்த்த வருவாய் வளர்ச்சி 13.26 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரி வருவாயின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில சரக்கு மற்றும் சேவை வரியில் அதிகளவிலான வளர்ச்சியை தமிழகம் தொடர்ந்து அடைகிறது. ஆனால், ஆய்வு செய்த்தில், மாநிலத்தில் வழங்கப்படும் இணையவழி சேவைகளுக்கான (Digital Services) வரி மாநிலத்துக்கு கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு, தமிழகத்தில் ஒரு நிறுவனம் வழங்கிய சேவைக்கு, வரி ஹரியாணா மாநிலத்துக்கு செலுத்தப்படுகிறது. ஏனென்றால், சேவை தமிழகத்தில் பெற்ற போதிலும், அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலம்தான் IGST பெற்று வருகிறது என்பதை அறிந்துள்ளோம். இதனால், பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடைந்தாலும், அதற்கேற்ப வரி கிடைப்பதில்லை. இதனை, பகுப்பாய்வு செய்வதற்காக (Economic Advisory Council) உறுப்பினர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை GST குழுவில், இதுகுறித்து விரைவில் விவாதிக்க நமது அரசு முயலும். மேலும், பல்வேறு சீர்திருத்தங்களை வரி வருவாய் திரட்டும் துறையில் எடுத்து வருகிறது. IIT-ஹைதராபாத் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 இணையசேவை பதிவுத் துறையில் செயல்படுத்த உள்ளோம். சுரங்கத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் அளவினை கணக்கிடுவதை மேற்கொண்டுள்ளோம். Seigniorage கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. மோட்டார் வாகன வரியும் திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்வரும் நிதியாண்டில் வரி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
கடன் சர்ச்சை: “10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நாங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
மின் துறையில் சீர்திருத்தம் ஏன்? - “மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்" என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் > மின் துறையில் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
அதேபோல், “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம்" என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் திட்டத்தை ‘பெயர் மாற்றி’ அறிவித்ததா தமிழக அரசு? - தங்கம் தென்னரசு மறுப்பு @ பேரவை
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago