அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை

By செய்திப்பிரிவு

சென்னை: “10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நாங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “பொருளாதாரத்தைப் பற்றியும் நிதி மேலாண்மை பற்றியும் எந்த ஓர் அடிப்படை புரிதலும் இல்லாமல், பரபரப்பை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் அரசின் கடன் அளவைப் பற்றி தவறான கருத்துகளை முன்வைத்துள்ளனர். எந்த ஒரு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போதும், அந்தகாலகட்டத்துக்கு ஏற்ப அதைப் பார்க்க வேண்டும். நாங்கள் 10 ஆண்டுகாலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நீங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளீர்கள் என்று கூறுவது தவறு.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், 2011-ல் வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 1.02 லட்சம் கோடி ரூபாய்தான்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.51 லட்சம் கோடி ரூபாய் தான். இன்று, வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாய் அளவும்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 31.55 லட்சம் கோடி ரூபாய் அளவும் உள்ளன.

இந்த அடிப்படையைக் கொண்டு, கடனைப் பொறுத்தவரை, அதை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட வேண்டும். அதாவது, மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர, அதன் கடன் வாங்கும் திறனும் , அதை திருப்பிச் செலுத்தும் திறனும் அதிகரிக்கும். அந்த வகையில்,15-வது நிதிக்குழு தமிழகத்துக்கு, கடன் அளவு குறித்த சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, 2021-22 ஆண்டு 15 வது நிதிக்குழுவின் வரம்பு 28.7 சதவீதம்; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 27.01 ஆகும்.

2022-23 ஆண்டு 15-வது நிதிக்குழுவின் வரம்பு 29.3; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 26.87 ஆகும். 2023-24 ஆண்டு 15 வது நிதிக்குழுவின் வரம்பு 29.1; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 26.72 ஆகும். 2024-25 ஆண்டு 15 வது நிதிக்குழுவின் வரம்பு 28.9; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 26.40 ஆகும். நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும், இங்கே இரண்டு முக்கிய விவரங்களைக் கூற கடமைப் பட்டிருக்கிறேன். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், இந்த ஆண்டு 9,000 கோடி ரூபாய் கடனும், அடுத்த ஆண்டு 12,000 கோடி ரூபாய் கடனும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது போதாது என்று, மாநில அரசின் நிதிநிலையை மேலும் பாதிக்கும் வகையில் கடுமையான நிபந்தனைகளை விதித்து, வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களைத் திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு நிபந்தனையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக இந்த ஆண்டு 17,117 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 14,442 கோடி ரூபாயும் மாநில அரசு வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவ்வாறு வழங்காவிட்டால், அதற்கு இணையான தொகை நமது கடன் வரம்பிலிருந்து கழிக்கப்படும். மத்திய அரசு இவ்வாறு நம் நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தாலே, நமது கடன் இந்த ஆண்டு சுமார் 26,117 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 26,442 கோடி ரூபாய் அளவுக்கும் குறைந்திருக்கும்.

மூலதனச் செலவுகள்: கடந்த ஆட்சிக்காலத்தில் மூலதனச் செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றது. 2011-12 ஆம் ஆண்டில் 16,336 கோடி ரூபாயாக இருந்ததை 2020-21 ஆம் ஆண்டில் 33,068 கோடி ரூபாயாக உள்ளது. நீங்கள் 10 வருடம் ஆட்சிசெய்த காலத்தில் மூலதனச் செலவுக்காக 16,732 கோடி ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளீர்கள்.

ஆனால், நாங்கள் கடும் நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில்கூட, மாநிலத்தின் வளர்ச்சியை ஈட்டும் மூலதனச் செலவுக்காக கடந்த மூன்று வருடத்திலேயே 33,068 கோடி ரூபாயாக இருந்ததை, 12,000 கோடி ரூபாயில் சென்னை மெட்ரோ உட்பட 59,681 கோடி ரூபாயாக உயர்த்தி, பணிகள் மேற்கொண்டு வருகிறோம். வெறும் 3 ஆண்டுகளில், நாங்கள் மூலதனச் செலவினத்தை 26,613 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளோம்.

மூன்றே வருடத்தில் 26,613 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளோம். நீங்கள் மூலதனச் செலவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கடந்து சென்ற வருடத்துக்கும் சேர்த்து, வரும்காலத்தில் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்து, நம் மாநிலத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்.

தற்போது, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மற்றும் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை போன்ற மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் திட்டங்கள், நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், மொத்தமாக 9,535 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சாலை மற்றும் பாலங்கள் மேம்பாட்டுக்காக 17,890 கோடி ரூபாய், போக்குவரத்துத் துறைக்கு 2,966 கோடி ரூபாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம், என்று பதில் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE