மேகேதாட்டு | தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலம் தலைவரே நியமிக்கப்படாமல் இருந்தது. அதனால் அதிமுக ஆட்சியில் பிரச்சினை வரவில்லை. இம்மாதம் 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகேதாட்டு பிரச்சினை வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி ஆணையத்தில் மேகேதாட்டு பிரச்சினை பற்றி விவாதிக்க கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளதையும் அன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் கர்நாடகாவோ, 'உச்ச நீதிமன்றம் அணை கட்டும் திட்டத்துக்கு எந்த தடையும் பிறப்பிக்கவில்லை. எனவே இத்திட்டம் பற்றி விவாதித்து, முடிவெடுத்து மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம்' என்றது. மத்திய நீர் ஆணையத்தில் ஒன்றிய அரசின் சார்பில் உள்ள உறுப்பினரோ இது முடியாது என்றார். கேரளா, பாண்டிச்சேரியும் இதேபோல் விவாதிக்க முடியாது என்று தெரிவித்தனர். அன்று எந்தவித ஓட்டெடுப்பும் நடக்கவில்லை. கருத்துக்கள் மட்டுமே சொல்லப்பட்டது. கர்நாடகாவை தவிர, மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மேகேதாட்டு திட்டத்தை திருப்பி அனுப்ப காவிரி ஆணைய தலைவர் ஒப்புக்கொண்டார்.

திருப்பி அனுப்ப ஒப்புக்கொண்ட இதே ஆணைய தலைவரே, மேகேதாட்டு திட்ட அறிக்கையை பரிசீலிக்க காவிரி ஆணையத்துக்கு மீண்டும் அனுப்ப உள்ளதாக நமக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு உடனே தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். ஜல்சக்தி அமைச்சகம், வனத்துறைக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மேகேதாட்டு திட்டம் அனுமதிக்கப்படவில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் மேகேதாட்டுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். பாஜக, காங்கிரஸ் என யார் வந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள். சித்தராமையா எனக்கு வேண்டியவர் தான். அவரும் அப்போது இருந்தே இந்த விஷயத்தில் இப்படித்தான் செய்கிறார்.

அவர்கள் நிதி ஒதுக்கினாலோ, மேகேதாட்டுவை கட்டியே தீருவோம் என்று ஆவேசமாக வசனம் பேசினாலோ அச்சப்படத் தேவையில்லை. காரணம் தமிழ்நாட்டின் இசைவின்றி அனுமதியை பெற முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேகேதாட்டுவுக்கு அனுமதியை தர மாட்டார்கள். எனவே அஞ்சத் தேவையில்லை.

உங்களுக்கு காங்கிரஸ் உடன் கூட்டணி இருக்கிறதே பேசக்கூடாதா என்கிறார்கள். பேசக்கூடாது என்பதே திட்டம். காரணம் பேசிப்பேசி அலுத்து போய் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிக்கு எவ்வளவு அக்கறை, ஆர்வம், வேகம் இருக்கிறதோ அதே வேகம், அதே அக்கறை, அதே உணர்வு எங்களுக்கும் உண்டு.” என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்