200 வார்டுகளிலும் பிரத்யேக மகளிர் உடற்பயிற்சிக் கூடம்: சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி செலவில் மகளிருக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலைக்குழு ( வரி விதிப்பு மற்றும் நிதி ) தலைவர் சர்பஜெயாதாஸ் பங்கேற்று 2024 - 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக மேயர் வெளியிட்ட அறிவிப்பில் இடம் பெற்றிருப்பதாவது: மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்யேக எம்பவ்ஹெர் ( EmpowHER ) உடற்பயிற்சி கூடங்கள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். மாமன்ற உறுப்பினர்களின் வார்டுமேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.45 லட்சமாகவும், மேயர்சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும் உயர்த்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடியில் 200 கையடக்கக் கணினி வாங்கப்படும்.

ரூ.404 கோடியில் 4,750 சாலைகள் மற்றும் நடைபாதைகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சியின் 255 பள்ளிகளில் ரூ.7.64 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3.59 கோடியில் ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்கப்படும். 4, 5-ம் வகுப்பு மாணவர்களை சென்னையை சுற்றியுள்ள வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25லட்சம் ஒதுக்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.1.16 கோடியில் 45 இருக்கைகள் கொண்ட4 பள்ளி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

மழலைகளுக்கு பட்டம்: 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் வளரிளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்க்க ரூ.35 லட்சத்தில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்தப் படுவார்கள். மழலை வகுப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழா ரூ.30 லட்சத்தில் நடத்தப்படும். சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த 45 தற்காலிக பணியாளர்கள் ரூ.1.16 கோடியில் நியமிக்கப் படுவார்கள். தென் சென்னையில் புதியதாக மாட்டுத் தொழுவம் அமைக்கப்படும்.

மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ரூ.70 லட்சத்தில் புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப் பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும். கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட விசைத் தெளிப்பான்களுடன் கூடிய துணைக் கருவிகள் ரூ.12 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.

நோய் பரப்பும் கொசுக்களுக்கான மருந்தின் எதிர்ப்புச் சக்தியைக் கண்டறிய நோய்க்கடத்தி கட்டுப்பாடு கண்காணிப்பு ஆய்வகம் அமைக்கப் படும். 8 நீர் நிலைகள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும். மாத்தூர் எம்எம்டிஏ காலனியில் உள்ள குளத்தில் பரிச்சார்த்த முறையில் ரூ. 8 கோடியில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கப்படும். காலி இடங்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகள் தன்னார்வலர்கள் மூலம் நடப்படும்.

சுகாதார நிலையங்களில்...: மாநகராட்சியின் 113 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மின் தடையால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க ரூ 5 கோடியில் ஜெனரேட்டர் வசதி, ரூ.4.20 கோடியில் மின் இன்வெர்ட்டர் வசதி ஏற்படுத்தப்படும். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் 3 வட்டார துணை ஆணையர்கள் அலுவலகங்களில் `தமிழ் வாழ்க, தமிழ் வளர்க' என்ற வாசகம் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்படும். வார்டுக்கு ஒரு தெரு என 200 வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகளை வகை பிரித்து வழங்கப் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். இவ்வாறு மேயர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்