நாடாளுமன்ற கட்டிடத்துடன் ஒப்பிட்டால் புதுச்சேரி பேரவை கட்டுமான திட்டச் செலவு அதிகம்: ஆளுநர் தமிழிசை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “நாடாளுமன்றக் கட்டிடத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி சட்டப்பேரவை கட்டுமான திட்டச் செலவு அதிகம். மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப்பேரவை கட்டுமானக் கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம்” என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அதற்கான புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் ராஜ் நிவாஸில் இன்று கூறியது: "ஆளுநர் பொறுப்பு ஏற்க ரிஸ்க் எடுத்து ஹெலிகாப்டரில்தான் புதுச்சேரி வந்தேன். அதன்பிறகு மகிழ்வுடன் பணியாற்றி வருகிறேன். அரசியல் வாதியாக இருந்து ஆளுநராக வந்ததால், எதிர் கருத்துக்கும் பதில் தருவது வழக்கம்.

என்னுடையது சுமுகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே உயர்த்திக்கொண்டேன். தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநராக இருந்ததால் அதிகமான முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளேன்.

நேர்மையான பயணம் செய்துக் கொண்டிருக்கும்போது, அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத் தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

சமீபத்தில் சட்டப்பேரவைக் கட்டிடம் கோப்பு தொடர்பாக பேரவைத் தலைவர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தற்போது அரசியலில் 25 ஆண்டுகள் செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. எந்தக் கோப்பிலும் சுய லாபத்தையும் பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத் தன்மையாகத்தான் ஆளுநர் அலுவலகம் இயங்குகிறது. மக்களின் வரிப் பணம் மிச்சமாக்கவே சட்டப்பேரவை கட்டுமானக் கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம்.

செலவினம் அதிகளவில் உள்ளது. நாடாளுமன்றக் கட்டிடம், தெலங்கானா கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும் ஆடம்பரமாக செலவிடப்பட்டுவிடக் கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். உபசரிப்பு தளம், விமான தளம் ஆகியவை சில உதாரணங்கள். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. ஆனால், சேற்றை வீசி ஒட்டப்பட்ட போஸ்டரை சில பத்திரிக்கைகள் வெளியிட்டது வருத்தம் தந்தது.

நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளுக்கு அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம் தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தாநான். நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுச்சேரியில் போட்டியிடுவது என்றோ வெளிப்படையாக சொல்லவில்லை. உடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள். இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண். அதனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுச்சேரியை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையாளத்தை தர வேண்டாம்.

மருத்துவக் கல்வியில் பத்து சதவீதம் இடஒதுக்கீடு அரசு பள்ளி குழந்தைகளுக்கு தந்துள்ளோம், வாட்டர்பெல் புதுச்சேரியில் அறிமுகம் செய்தோம். அதுபோல் நோ பேக் டே, பஞ்சு மிட்டாய் விவகாரத்தை தமிழகம் உட்பட பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதில் சுய லாபம் இல்லை. சகோதரியாகதான் பணியாற்றுகிறேன். அதனால் வேறுபடுத்தாதீர்கள் - அது மனவலி தருகிறது. அதிலும் மன வலிமை பெறுகிறேன். போட்டியிடுவதாக சொல்லவில்லை - வழிகாட்டுதல்படி செயல்படுவேன். அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை - ஆனால் ஒத்துழைப்பு போதியளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன்.

நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள். ரேஷனுக்கு பதில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரப்படுகிறது. கடந்த ஆட்சியில் இருந்து தரப்படுகிறது. ரேஷன் கடை திறக்க முடியாது என சொல்லவில்லை. நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் உள்ளன. அதனால் உடன் திறக்க முடியவில்லை.

புதுச்சேரியில் எதுவாக தொடர விரும்புகிறீர்கள் என கேட்கிறீர்கள். நான் புதுச்சேரியில் இப்போது துணைநிலை ஆளுநராக பணியாற்றி வருகிறேன். ஆளுநர் சொத்து கணக்கை தாக்கல் செய்ய திமுக தெரிவித்துள்ளதை கேட்கிறீர்கள். நான் சொத்து சேர்க்கவில்லை, எனது கோட்டும் ஒயிட்- நோட்டும் ஒயிட் காசு பற்றி என்னிடம் பேசாதீர்கள்" என்று தமிழிசை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE