கிருஷ்ணகிரியில் திமுக போட்டியா? - துரைமுருகனின் ‘வாய்ஸ்’ கலக்கத்தில் காங்கிரஸ்

By எஸ்.கே.ரமேஷ்

கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமும், அண்டைய மாநில அரசியல் தாக்கமும் அதிகம் இருக்கும். இதனால், திராவிட கட்சிகள் பெரும்பாலும், இத்தொகுதியை தங்கள் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிகளுக்கு ஒதுக்குவது வாடிக்கை.

திமுக கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்லகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இம்முறை திமுக போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 பேரவைத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் ஓசூர், பர்கூரில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றன. இம்முறை திமுக வெல்வதன் மூலம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என உள்ளூர் திமுகவினர் கணக்கு போடுகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் கடந்த 17-ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை தோழமை கட்சியின் வேட்பாளரை 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தோம்.

ஒருவேளை திமுக போட்டியிடுகிறது என்றால்.... வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்கு இருக்கும். இல்லை... இல்லை... அப்படியிருந்தால் எப்படியிருக்கும் என நான் கூற வந்தேன். பொதுச்செயலாளராக நான் தான் அறிவிக்க முடியும். ஆனால் தற்போது அறிவிக்க முடியாது” என்றார்.

துரைமுருகனின் இந்த பேச்சால் இம்முறை நமக்குத்தான் தொகுதி என திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரம் கிருஷ்ணகிரியின் தற்போதைய எம்.பி.செல்லக்குமார் மீண்டும் போட்டியிட விரும்பும் நிலையில் அவருக்கு சீட் தரக்கூடாது என உள்ளூர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கி இருந்தனர்.

மண்ணின் மைந்தருக்கே வாய்ப்பு தர வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றியிருந்தனர். மொத்தத்தில் காங்கிரஸுக்கே தொகுதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் காங்கிரஸார் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE