திமுகவில் விருப்ப மனு விநியோகம் விறுவிறு

By செய்திப்பிரிவு

திமுகவில் 2-வது நாளாக விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. அந்தவகையில் நேற்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களுக்கு இந்த மனுக்கள் விநியோகிக்கப்படும். கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து வரும் மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் திமுகவில் விருப்ப மனுக்களை கட்சியின் தொண்டர்கள் ரூ.2 ஆயிரம்செலுத்தி ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். நேற்றுமுன்தினம் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.

இதன்படி அதிகபட்சமாக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்காக 32 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கும் அதிகளவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதையடுத்து நேற்று 2-வது நாளாக காலை 10.30 முதல் விருப்ப மனு விநியோகம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விண்ணப்பங்களை தொண்டர்களுக்கு வழங்கினார். செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தார். 2-ம் நாள் முடிவில் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் திமுக போட்டியிடும் இடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அந்த நேர்முகத் தேர்வில் வேட்பாளர் கேட்கும் தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா, வெற்றி வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE