‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டுஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார்20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆலோசித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 3 மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனவும் பள்ளிக்கல்வித் துறைஅறிவித்தது. ஆனால், அதில்தாமதம் ஏற்படுவதால் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி சென்னைடிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 350 ஆசிரியைகள் உட்பட 750 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் தலைமையில் ஏராளமான ஆசிரியர்கள் நேற்றும் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். நேற்று 400 ஆசிரியைகள் உட்பட 900 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

கோரிக்கை மீதான தீர்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதால் இன்றும் (பிப்.21) முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE