முதல்வர் ஸ்டாலினை சந்திக்க புறப்பட்ட மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தம் @ செய்யாறு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று (பிப். 20) மனு கொடுக்கச் செல்ல முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மேல்மா சிப்காட் திட்ட எதிர்ப்பு இயக்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 3-ம் கட்ட சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு (மேல்மா சிப்காட்) 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது. இதற்கு 9 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முப்போகம் விளையக்கூடிய விளை நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாய இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் கடந்த 7 மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதற்கு பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்பபு தெரிவித்தது. இதன் எதிரொலியாக விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “9 ஊராட்சிகளில் 2 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் கிடையாது” என கருத்து தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விவசாய நிலத்தில் இறங்கி பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிலம் இருப்பதை உறுதி செய்தால், அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலக தயாரா என கேள்வி எழுப்பினர். மேலும், வடஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உருவபொம்மையை எரித்து முழக்கமிட்டனர்.

இதன்தொடர்ச்சியாக, “குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் இல்லை; கைது செய்யப்பட்டவர்கள் நிலமற்றவர்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த பொய்யான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும், தொடர்ந்து போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியும், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி” சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் இருந்து இன்று (பிப்.20) விவசாயிகள் புறப்பட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதை காரணமாக எடுத்துரைத்து, சென்னை செல்வதை அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்புக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக கண்டன முழக்கமிடப்பட்டன. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி, போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE