செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE