சென்னையில் இரவோடு இரவாக 76 ரவுடிகளை சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்த சம்பவம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகளை கண்டறிந்து கைது செய்ய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் எம்.டி.கணேசமூர்த்தி மேற்பார்வையில் துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில் குமார் தலைமையில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. “சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூட உள்ளனர்” என்பதே அந்த தகவல். ஆனால் ரவுடிகள் எங்கு, எப்போது, எதற்காக கூடப்போகிறார்கள் என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காவல் ஆணையருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், அவர் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக காலை 8.30 முதல் சென்னை முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. வாகன சோதனை செய்த போலீஸாருக்கு அருகில் சாதாரண உடை அணிந்த போலீஸார், ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸார், நுண்ணறிவு மற்றும் உளவு பிரிவு போலீஸார் சிறிது தூர இடை வெளியில் நின்று கொண்டனர்.
ஓட்டம் பிடித்த ரவுடிகள்
மாலை 3 மணியளவில், பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாரைக் கண்டு, பைக்கில் வந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். அப்போது அருகில் இருந்த போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அப்போது ஒரு போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், “மச்சான் இரவு 7 மணிக்கு பார்ட்டி. நம்ம ஆட்கள் எல்லாரும் வர்றாங்க. மிஸ் பண்ணிடாத...” என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
ஆனால் பார்ட்டி நடக்கும் இடத்தைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், “மலையம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்டுக்கு நீ வரலியா? நான் வர்றேன்” என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிடிபட்ட 2 பேரும் பள்ளிக்கரணை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாலை 6 மணியளவில் மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார், அம்பத்தூர் துணை ஆணையர் எஸ்.சர்வேஸ்ராஜ் தலைமையிலான போலீஸார் அவசர ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து 1 உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர்கள், 18 உதவி ஆய்வாளர்கள், 40 போலீஸார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வேலு லாரி ஷெட்டில் வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளதாக அடுத்தகட்ட தகவல் கிடைத்ததும், அந்த லாரி ஷெட் எங்குள்ளது என போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். நேரடியாக சென்று விசாரித்தால் அனைவரும் கலைந்து சென்று விடுவார்கள் என்பதால் ரகசியமாக விசாரணை நடத்தி, அந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.
முன்னதாக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என்று ஊர்ப் பெரியவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மூலம் போலீஸார் அறிவுரை வழங்கினர். இரவு 7 மணிக்கு விழா நடைபெற்ற லாரி ஷெட் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 7 மணி நெருங்கியதும் பைக், கார்களில் ஒருவர் பின் ஒருவராக சினிமாவில் வருவதுபோல் அரிவாள், கத்திகளை சுழற்றியபடி கோஷமிட்டவாறு ஒவ்வொரு ரவுடியாக அங்கு வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
காத்திருந்த போலீஸார்
ரவுடிகள் அனைவரும் வந்து சேர்வதற்காக, இரவு 11.30 மணிவரை போலீஸார் காத்திருந்தனர். இதற்குள் ரவுடிகள் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு சற்று அசதியானார்கள். இந்த நேரத்தில் தயாராக இருந்த தனிப்படை போலீஸார், துப்பாக்கிகளை ஏந்தியபடி லாரி ஷெட்டுக்குள் புகுந்து ரவுடிகளை மடக்கினர்.
விரட்டிப் பிடித்தனர்
போலீஸாரின் பிடியில் முதலில் 40 பேர் மட்டுமே சிக்கினர். மற்றவர்கள் சிதறி ஓடினர். விழா நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்று மாட்டுக் கொட்டகை, குடிசைகளின் கூரை, மரங்கள் ஆகியவற்றில் ஒளிந்துகொண்டனர். அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். அதிகாலை 2 மணிக்குப் பிறகு ஆயுதப்படை போலீஸார் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். காலை 6 மணிக்கு வேட்டை முடிவுக்கு வந்தது. ரவுடிகள், மாணவர்கள், சிறார்கள் என மொத்தம் 116 பேர் சிக்கினர். இதில் 76 பேர் மட்டுமே ரவுடிகள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைவரையும் போதை தெளியும்வரை ஒரே இடத்தில் வைத்திருந்த போலீஸார்,
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட ரவுடிகளில் கொலை மற்றும் கூலிப்படைக்கு தலைவனாக திட்டம் போட்டு கொடுப்பவர்களை ‘ஏ பிளஸ்’ பிரிவிலும், கொலையாளிகள் ‘ஏ’ பிரிவிலும், திருட்டு வழிப்பறியில் ஈடுபடுபவர்களை ‘பி’ பிரிவிலும் போலீஸார் வைத்துள்ளனர். சாதாரண குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள் ‘சி’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 363 பேரை ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 54 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுபோக சென்னையில் உள்ள 135 காவல் நிலையத்திலும் மொத்தம் 500 ரவுடிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள..
தலைமறைவாக உள்ள பினு, கனகராஜ், விக்னேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago