உலகத் தாய்மொழி நாள்: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் நிலையை எட்ட ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் அன்னைத் தமிழ் தொடர்பான மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (பிப்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அன்னைத் தமிழைக் காக்க தீக்குளித்த தீரர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை கவலையளிக்கிறது.

உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு நாளை கொண்டாடப்படுகிறது. உலகத் தாய்மொழி நாளுக்கு நீண்ட, உணர்ச்சி மிகுந்த வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப் படவில்லை. அதைக் கண்டித்தும், வங்க மொழியை அங்கீகரிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்ப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் முழக்கமாக உள்ளது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த முழக்கம் தீவிரமடைந்தது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப் பட்ட அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்க வலியுறுத்தி சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததால் அன்னைத் தமிழை இன்று வரை அரியணை ஏற்ற முடியவில்லை.

தமிழ் பயிற்று மொழி மட்டும் தான் என்றில்லாமல், கடைகளின் பெயர்ப்பலகைகள், உயர்நீதிமன்றம், திருமணங்கள், ஆலய வழிபாடு என எங்குமே அண்னைத் தமிழைக் காண முடியவில்லை. இப்படியாக தமிழன்னைக்கு இழைக்கப்படும் அவமானத்தை துடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த ஆண்டு உலகத் தாய்மொழி நாளான 2023&ஆம் ஆண்டு பிப்ரவரி 21&ஆம் நாள் சென்னையில் தமிழன்னை சிலையுடன் தமிழைத்தேடி என்ற தலைப்பில் பயணத்தைத் தொடங்கினேன். செங்கல்பட்டு, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக பிப்ரவரி 28&ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பயணத்தை நிறைவு செய்தேன்.

தமிழைத்தேடி பயணம் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அன்னைத் தமிழ் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் கோரிக்கைகளாக தொடர்கின்றன. பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும், தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும், தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும், செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என கடந்த ஓராண்டில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய போதிலும் எந்தக் கோரிக்கையும் இன்னும் நிறைவேறவில்லை.

இந்தி ஆதிக்கத்திலிருந்து அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக 500-க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் இருக்கிறது. இதை உணர்ந்து அன்னைத் தமிழ் தொடர்பான மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்