அரசு பள்ளியில் மரத்தடியில் கல்வி பயின்ற குழந்தைகள்: வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பெற்றோர் @ திருவிடைமருதூர்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மருத்துவக்குடியில் சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாததால், மரத்தடியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையை அடுத்த மருத்துவக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 45 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்தப் பள்ளிக் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் பள்ளி தற்காலிகமாக இயங்கி வந்தது. பின்னர், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதால், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படாததைக் கண்டித்து, தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ஸ்டாலின், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைத்து, பள்ளிக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அதுவரை பள்ளியின் அருகே ஒரு வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் மாணவ, மாணவிகள் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE