சென்னை: இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. "தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. 2011-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது.
தற்போது அவரது வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘குடிசை இல்லா தமிழ்நாடு’ திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
» MSP விவகாரம்: ‘மத்திய அரசின் முன்மொழிவை நிராகரிக்கிறோம்’ - விவசாய அமைப்புகள்
» ‘500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது’ - அஸ்வினின் மனைவி பகிர்வு
இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவுபடுத்துவதற்காக ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.
புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.
கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அறிவுசார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.
சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு என்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.
ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழகத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள தமிழக முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித்துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago