“மோடி அரசின் கடன் பற்றி இபிஎஸ் வாய் திறக்காதது ஏன்?” - அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

By செய்திப்பிரிவு

சென்னை: “ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பட்ஜெட் தொடர்பான விமர்சனத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது’ எனப் புலம்பியிருக்கிறார். ‘திமுக அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது’ எனச் சொல்லியிருக்கிறார்.

எம்ஜிஆர் மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அதிமுகவின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். ‘ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அதிமுக தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.

நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதாவையும், பழனிசாமியையும் குளிர்விப்பதற்கே தமிழக சட்டமன்றம் பயன்பட்டது. 2011 - 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020-2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.

‘கடன்’ என்ற சொல்லுக்குக் ‘கடமை’ என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அதிமுக அரசின் சாதனை. ‘ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது’ என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.

ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு அதிமுக. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?

2014-இல் டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்? பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அது உண்மையென்றால் மத்திய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?

பழனிசாமி அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். “அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது” எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும்.

’தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது’ எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். | வாசிக்க > கடன்‌ வரம்பு நிபந்தனைகளால் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது மத்திய அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்