அண்ணாமலை மார்ச் 2-ல் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

By செய்திப்பிரிவு

சேலம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 2-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனர்களின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜேஎம் எண்:4 நீதிமன்ற குற்றவியல் நீதிமன்ற நடுவர் வரும் மார்ச் மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து பியூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சேலம் ஜேஎம் எண்:4 நீதிமன்றத்தில் நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் நாச்சிமுத்து ராஜா ஆஜராகி வாதாடினார்.

அப்போது, ‘பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கை மூன்று மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என நீதித்துறை நடுவரிடம் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதித்துறை நடுவர், தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் செய்து வருகிறார். அவரை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறி வழக்கை வரும் மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்று அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE