கடன்‌ வரம்பு நிபந்தனைகளால் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது மத்திய அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

By செய்திப்பிரிவு

சென்னை: “2024-25-ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மூலதனச்‌ செலவினம்‌ 47,681 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24-ஆம்‌ ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளுடன்‌ ஒப்பிடும்போது 12.11 சதவீத வளர்ச்சி கொண்டதாகும்‌. சென்னை மெட்ரோ ரயில்‌ திட்டத்துக்கான செலவினம்‌ 9,000 கோடி ரூபாயிலிருந்து 12,000 கோடி ரூபாயாக அதிகரித்ததன்‌ காரணமாக நிகர கடன்கள்‌ மற்றும்‌ முன்பணங்கள்‌ 11,733 கோடி ரூபாயாக இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டமைப்புத்‌ திட்டங்களில்‌ பெருமளவில்‌ முதலீடு செய்வதுடன்‌, மாநிலத்தின்‌ மூலதனச்‌ செலவினத்தை அதிகரிப்பதிலும்‌ அரசு உறுதியாக உள்ளது” என்று தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும், கடன்‌ வாங்கும்‌ வரம்பு குறித்து மத்திய அரசு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதன்‌ மூலம்‌, வளர்ச்சித்‌ திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களை திரட்டும்‌ மாநில அரசின்‌ அதிகாரத்தையும்‌ மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையின் இறுதியாக கூறியது: “தற்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமையை விளக்க விழைகிறேன். சென்னை மெட்ரோ ரயில்‌ திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல்‌ கிடைப்பதில்‌ காலதாமதம்‌ ஏற்படுவதால்‌, அத்திட்டத்துக்கான முழுச்‌ செலவையும்‌ மாநில அரசு தனது நிதியிலிருந்து ஏற்கவேண்டிய கட்டாயம்‌ ஏற்பட்டுள்ளது. இதன்‌ விளைவாக அரசுக்கு நடப்பு ஆண்டில்‌ 9,000 கோடி ரூபாய்‌ செலவினம்‌ ஏற்பட்டுள்ளது. மேலும்‌, 30.06.2022 முதல்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீடு நிறுத்தப்பட்டதால்‌ ஆண்டொன்றுக்கு சுமார்‌ 20,000 கோடி ரூபாய்‌ வருவாய்‌ இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சவால்கள்‌ நிறைந்த சூழ்நிலையில்‌, 202-24-ஆம்‌ ஆண்டுக்கான நிதிநிலை கடந்த மார்ச்‌ மாதம்‌ தாக்கல்‌ செய்யப்பட்டது.

நடப்பு ஆண்டில்‌ ஏற்பட்ட இரு தொடர்‌ பேரிடர்கள்‌ ஏற்படுத்திய பாதிப்பு, இந்தச் சூழ்நிலையை மேலும்‌ மோசமடையச்‌ செய்து, மாநிலத்தின்‌ நிதி நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது. தேவையான நிவாரணத்‌ தொகையை வழங்குவதற்கும்‌, தற்காலிக மற்றும்‌ நிரந்தர சீரமைப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்வதற்கும்‌ எதிர்பாராச்‌ செலவினம்‌ ஏற்பட்டுள்ளதுடன்‌, குறிப்பிடத்தக்க அளவில்‌ வருவாய்‌ இழப்பும்‌ ஏற்பட்டுள்ளது. பல முறை மத்திய அரசிடம்‌ கோரிக்கை விடுக்கப்பட்டபோதும்‌, தேசிய பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து எந்தவொரு நிதியையும்‌ மாநில அரசுக்கு இதுவரை வழங்கவில்லை. மாநிலத்தின்‌ எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, மாநில அரசின்‌ நிதிநிலையை மேலும்‌ பாதிக்கும்‌ வகையில்‌, கடன்‌ வாங்கும்‌ வரம்பு குறித்து மத்திய அரசு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதன்‌ மூலம்‌, வளர்ச்சித்‌ திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களை திரட்டும்‌ மாநில அரசின்‌ அதிகாரத்தையும்‌ மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.

இத்தகைய கடுமையான நிபந்தனைகளுள்‌ ஒன்றின்‌ விளைவாக, நடப்பு ஆண்டில்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்துக்கு மாநில அரசு, இழப்பீட்டு நிதியாக 17,117 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையை நிறைவேற்றத்‌ தவறும்‌ நேர்வில்‌, அதற்கு இணையான தொகை நமது கடன்‌ வாங்கும்‌ வரம்பிலிருந்து கழிக்கப்படும்‌. மேலும்‌, இதேபோன்று அடுத்த நிதியாண்டிலும்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக 14,442 கோடி ரூபாய்‌ வழங்கப்பட வேண்டும்‌.

மின்‌ துறையில்‌ சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்த அரசு உறுதிகொண்டுள்ள அதே வேளையில்‌, இத்தகைய நிபந்தனை, மாநில அரசின்‌ நிதி நிலையின்‌ மீது பெரும்‌ சுமையை ஏற்படுத்தி, வளர்ச்சிப்‌ பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பாதிக்கிறது. கடந்த காலத்தில்‌ நடைமுறைப்படுத்தப்பட்ட உதய்‌ (UDAY) திட்டத்தினைப்‌ போன்று, இந்தத்‌ தொகையினையும்‌ நிதிப்‌ பற்றாக்குறை மற்றும்‌ கடன்‌ உச்சவரம்பு கணக்கீட்டிலிருந்து நீக்கம்‌ செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மாநில அரசு மத்திய அரசிடம்‌ முன்வைத்துள்ளது.

இச்சூழ்நிலையில்‌, 2023-24-ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 3,08,056 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள வருவாய்‌ செலவினங்கள்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 3,17,484 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ மின்‌ பகிர்மானக்‌ கழகத்துக்கு 15,594 கோடி ரூபாய்‌ நிதி இழப்பீடு, பேரிடர்‌ நிவாரண உதவி மற்றும்‌ சீரமைப்புச்‌ செலவினங்களுக்காக 2,041 கோடி ரூபாய்‌ ஆகியவற்றால்‌ வருவாய்ச்‌ செலவினத்தில்‌ உயர்வு ஏற்பட்டபோதிலும்‌, திறன்மிக்க நிதி மேலாண்மை மூலம்‌, வருவாய்‌ செலவினங்களின்‌ உயர்வு 9,428 கோடி ரூபாய்‌ அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வருவாய்‌ வரவுகளை பொறுத்தவரையில்‌, 2023-24 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 1,70,147 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இயற்கைப்‌ பேரிடர்களின்‌ தாக்கத்தினால்‌, 2023-24 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 20.61 சதவீதம்‌ என எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாயின்‌ வளர்ச்சி, திருத்த மதிப்பீடுகளில்‌ 13.26 சதவீதம்‌ எனக்‌ குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின்‌ சொந்த வரி அல்லாத வருவாய்‌, 2023-24-ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளுடன்‌ ஒப்பிடுகையில்‌ கணிசமாக உயர்ந்து, திருத்த மதிப்பீடுகளில்‌ 30,381 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரிவிகிதங்களைச்‌ சீரமைத்தல்‌, வசூலிக்கும்‌ திறனை மேம்படுத்துதல்‌ போன்ற இவ்வரசால்‌ மேற்கொள்ளப்பட்ட வருவாயை அதிகரிக்கும்‌ முயற்சிகளின்‌ விளைவாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து பெறும்‌ உதவி மானியங்கள்‌ மற்றும்‌ மத்திய வரிகளில்‌ மாநில அரசின்‌ பங்கு ஆகியவை மத்திய அரசின்‌ நிதிப்‌ பங்கீட்டில்‌ அடங்கும்‌. மத்திய அரசிடமிருந்து பெறப்படும்‌ உதவி மானியங்கள்‌, 2023-24 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீடுகளில்‌ 26,996 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2023-24 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டை விட சிறிதளவு குறைவானதாகும்‌. வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 41,665 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய அரசின்‌ வரிகளில்‌ மாநில அரசின்‌ பங்கு, திருத்த மதிப்பீடுகளில்‌ 45,053 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தனது வரி வசூல்‌ அதிகரிக்கும்‌ என்று எதிர்பார்த்ததன்‌ அடிப்படையில்‌ திருத்த மதிப்பீடுகளில்‌ இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை: ஒட்டு மொத்தமாக 2023-24 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய்‌ பற்றாக்குறையுடன்‌ ஒப்பிடுகையில்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ வருவாய்‌ பற்றாக்குறை 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24-ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 36,017 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்துக்கான இழப்பீட்டு நிதி நீங்கலான வருவாய்ப்‌ பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில்‌ 27,790 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. பேரிடர்களின்‌ விளைவாக வருவாயிலும்‌ செலவினங்களிலும்‌ பாதகமான விளைவுகள்‌ ஏற்பட்ட போதிலும்‌, வருவாய்‌ பற்றாக்குறையை அரசு திறன்பட நிருவகித்துள்ளது.

2023-24-ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 44,366 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மூலதன செலவினங்கள்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 42,532 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்‌, வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 10,169 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த நிகரக் கடன்கள்‌ மற்றும்‌ முன்பணங்கள்‌ திருத்த மதிப்பீடுகளில்‌ 6,624 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரு தொடர்‌ பேரிடர்கள்‌ ஏற்பட்டதன்‌ விளைவாக திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில்‌ ஏற்பட்ட தொய்வே இதற்குக்‌ காரணமாகும்‌.

2023-24-ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 92,075 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப்‌ பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில்‌ 94,060 கோடி ரூபாயாக சிறிதளவு அதிகரிக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறையும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளதன்‌ காரணமாக, 2023-24-ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ 3.25 சதவீதமாக மதிப்பிடப்பட்ட நிதிப்பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில்‌ 3.45 சதவீதமாக அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நான்‌ 2024-25 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளை விளக்க விழைகிறேன்‌. மாநிலப்‌ பொருளாதார வளர்ச்சி, வரி விகிதங்களில்‌ மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்‌ மற்றும்‌ வரி வசூலில்‌ திறன்‌ மேம்பாடு ஆகியவற்றைக்‌ கருத்திற்கொண்டு, 2024-25 ஆம்‌ ஆண்டுக்கான மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌ மதிப்பீடுகள்‌ 14.71 சதவீதம்‌ வளர்ச்சியுடன்‌ 1,95,173 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்‌ வணிக வரிகள்‌ மூலம்‌ 1,43,381 கோடி ரூபாய்‌, முத்திரைத்தாள்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணங்கள்‌ மூலம்‌ 23,370 கோடி ரூபாய்‌, மாநில ஆயத்தீர்வைகள்‌ மூலம்‌ 12,247 கோடி ரூபாய்‌ மற்றும்‌ வாகனங்கள்‌ மீதான வரிகள்‌ மூலம்‌ 11,560 கோடி ரூபாய்‌ அடங்கும்‌. மாநிலத்தின்‌ சொந்த வரி அல்லாத வருவாயில்‌ காணப்படும்‌ வளர்ச்சி அதே அளவில்‌ நீடிக்கும்‌ என்ற எதிர்பார்ப்பில்‌ 2024-25 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும்‌ நிதியாண்டில்‌, சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீடு முற்றிலும்‌ நின்று விடும்‌ என்பதால்‌,2023-24 ஆம்‌ ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளுடன்‌ ஒப்பிடும்போது, 2024-25 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மத்திய அரசிடமிருந்து பெறப்படும்‌ உதவி மானியங்கள்‌ குறைத்து 23,354 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 ஆம்‌ ஆண்டுக்கான மத்திய அரசின்‌ ஒதுக்கீடுகளின்‌ அடிப்படையில்‌, 2024-25 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மத்திய அரசின்‌ வரிகளில்‌ மாநில அரசின்‌ பங்கு 49,755 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-25ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, மொத்த வருவாய்ச்‌ செலவினம்‌ 3,48,289 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற செலவினங்களான சம்பளங்கள்‌, ஓய்வூதியங்கள்‌ மற்றும்‌ வட்டித்‌ தொகை வழங்குவதற்கான மதிப்பீடுகள்‌ அதிகரித்துள்ளது. மானியங்கள்‌ மற்றும்‌ உதவி மானியங்கள்‌ வழங்குவதற்கான மதிப்பீடுகள்‌ 1,46,908 கோடி ரூபாய்‌ என உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம்‌, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை திட்டத்தினை முதல்‌ முறையாக முழு ஆண்டுக்கும்‌ செயல்படுத்த உள்ளதால்‌ ஏற்படும்‌ கூடுதல்‌ செலவினம்‌ 5,696 கோடி ரூபாய்‌ ஆகும்‌.

ஒட்டுமொத்தமாக, 2024-25 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ இழப்பீட்டுக்கான நிதி 14,442 கோடி ரூபாயையும்‌ சேர்த்து வருவாய்ப்‌ பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீட்டுத்‌ தொகை நீங்கலாக, வரும்‌ ஆண்டில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை 34,837 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாய்ப்‌ பற்றாக்குறை, 2023-24 ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ உள்ள தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்துக்கான இழப்பீட்டு நிதி நீங்கலான வருவாய்ப்‌ பற்றாக்குறையை விட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2024-25ஆம்‌ ஆண்டுக்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மூலதனச்‌ செலவினம்‌ 47,681 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24 ஆம்‌ ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளுடன்‌ ஒப்பிடும்போது 12.11 சதவீத வளர்ச்சி கொண்டதாகும்‌. சென்னை மெட்ரோ ரயில்‌ திட்டத்துக்கான செலவினம்‌ 9,000 கோடி ரூபாயிலிருந்து 12,000 கோடி ரூபாயாக அதிகரித்ததன்‌ காரணமாக நிகர கடன்கள்‌ மற்றும்‌ முன்பணங்கள்‌ 11,733 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டமைப்புத்‌ திட்டங்களில்‌ பெருமளவில்‌ முதலீடு செய்வதுடன்‌, மாநிலத்தின்‌ மூலதனச்‌ செலவினத்தை அதிகரிப்பதிலும்‌ இந்த அரசு உறுதியாக உள்ளது.

மொத்தத்தில்‌, நிதிப்பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ 344 சதவீதம்‌ ஆகும்‌. பதினைந்தாவது நிதிக்‌ குழுவின்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்,மாநிலத்தின்‌ வளர்ச்சியைப்‌ பாதிக்காமல்‌ நிதிப்பற்றாக்குறையைக்‌ கட்டுப்படுத்தும்‌ சீரிய நிதி நிருவாக மேலாண்மையை இந்த அரசு கடைப்பிடித்து, 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ 3.46 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறையை 2023-24ஆம்‌ ஆண்டில்‌ 3.45 சதவீதமாகவும்‌, 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 3.44 சதவீதமாகவும்‌ குறைத்துள்ளது.

மாநிலத்தின்‌ வரவு-செலவுத்‌ திட்ட வருவாய்‌ ஆதாரங்களில்‌ இருந்தே தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்துக்கு இழப்பீட்டு நிதி வழங்கிய பின்பும்‌ பேரிடர்களால்‌ கடும்‌ பாதிப்பைச்‌ சந்தித்தபோதிலும்‌ நிதிப்பற்றாக்குறையைக்‌ குறைத்து இந்த அரசு சாதனை புரிந்துள்ளது. பல்வேறு சவால்களுக்கு இடையிலும்‌, திறன்மிகு நிதி மேலாண்மையை உறுதியாகக்‌ கடைப்பிடித்து, அதே நேரத்தில்‌ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு உறுதி கொண்டிருப்பதை தடைகளைத்‌ தாண்டி வளர்ச்சியை நோக்கிப்‌ பயணிக்கும்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டம்‌ கோடிட்டுக்‌ காட்டுகிறது.

அண்மையில்‌, பதினாறாவது நிதிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு மத்திய அரசின்‌ வரிகளைப்‌ பகிர்ந்தளிப்பதில்‌ முந்தைய நிதிக்குழுக்களால்‌ இழைக்கப்பட்டுள்ள வரலாற்று அநீதியை, டாக்டர்‌. அரவிந்த்‌ பனகாரியாவின்‌ தலைமையில்‌ உள்ள நிதிக்குழுவினால்‌ சரி செய்யப்படும்‌ என்று இந்த அரசு நம்புகிறது. தமிழகத்தின்‌ வளர்ச்சியைக்‌ காரணங்கூறாமல்‌, நாட்டின்‌ வளர்ச்சிக்குக்‌ கைகொடுக்கும்‌ வகையில்‌ தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய உரிய நிதியை உறுதிசெய்யும்‌ நியாயமான முறையை நாங்கள்‌ எதிர்நோக்குகிறோம்‌.

கடந்த 75 ஆண்டுகளில்‌ நாட்டின்‌ மாநிலங்கள்‌ பொருளாதார வளர்ச்சி மட்டும்‌ அடைந்தன.மற்ற சில மாநிலங்கள்‌ கல்வி, சுகாதாரம்‌ என சமூகக்‌ குறியீடுகளில்‌ மட்டும்‌ முன்னேற்றம்‌ அடைந்தன. மாற்றாக சமூக முன்னேற்றம்‌, தொழில்‌ வளர்ச்சி என அனைத்து தளங்களிலும்‌ பெருவளர்ச்சி பெற்று தமிழ்நாடு தன்‌ முத்திரையைப்‌ பதித்துள்ளது. குறிப்பிட்டுச்‌ சொல்வது என்றால்‌, ஏற்றுமதி தயார்நிலைக்‌ குறியீட்டில்‌ நாட்டிலேயே முதலிடம்.

மின்னணுப்‌ பொருட்கள்‌, மோட்டார்‌ வாகனங்கள்‌ உற்பத்தியிலும்‌ ஏற்றுமதியிலும்‌ நாட்டில்‌ முதலிடம்‌. புத்தொழில்‌ சூழல்‌ அமைவுக்கான தரவரிசையில்‌ முன்னணி மாநிலம்‌. தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ மகளிரின்‌ பங்கேற்பு நாட்டிலேயே முதன்மை. உயர்‌ கல்விச்‌ சேர்க்கையில்‌ நாட்டில்‌ முதலிடம்‌. தேசிய தரவரிசைப்‌ பட்டியலில்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த 146 கல்வி நிறுவனங்கள்‌ இடம்பெற்று நாட்டிலேயே முதலிடம்‌.

இவ்வாறு உலகமே வியந்து பாராட்டும்‌ தமிழகத்தின்‌ வளர்ச்சிக்கு அயராது உழைத்த தலைவர்கள்‌ பலரும்‌ இம்மாமன்றத்தில்‌ ஓவியமாக உறைந்து நின்றாலும்‌, நம்‌ எண்ணங்களில்‌ என்றென்றும்‌ நிறைந்து நம்மை வழிநடத்திக்‌கொண்டே இருக்கிறார்கள்‌. அந்த வழியில்‌ தமிழக முதல்வர் தலைமையில்‌ நாமெல்லாம்‌ பணியாற்றுவது நமக்குக்‌ கிடைத்த பெருமை” என்று பேசினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்