அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பட்ஜெட் 2024-25-ல், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு 7,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2024-25-ஆம் ஆண்டில், மகளிர் நலன் காக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

> கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. மகத்தான இத்திட்டத்தை பல்வேறு மாநிலங்களிலுள்ள மகளிரும் பயன்பெறும் வகையில், எதிர்காலத்தில் இந்த நாடே பின்பற்றும் என்று நம்புகிறோம். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

> சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40-லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பயணம் செய்து, ஜனவரி 2024 நிலவரப்படி, பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டும். மகளிரின் பேராதரவு பெற்ற இத்திட்டத்துக்கான மானியத்தொகையாக 3,050 கோடி ரூபாயை 2024-25-ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.

> மூவலூர் ராமமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர் கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்து, 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

> முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> குழந்தைகள் மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்திடும் வகையில், வரும் நிதியாண்டில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் 500 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் 3,123 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

> இதுவரை சுயஉதவிக் குழு இயக்கத்தில் இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில், 35,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

> வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.

> உயர் கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் கூடுதலாக அரசால் வழங்கப்படும்.

> அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றைத் திறம்படச் செயல்படுத்தவும், அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உரிய ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், உரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது என இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுவரை சமூகப் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தத் துறை, இனி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும், தலைமைப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, துறையின் மனிதவள மேலாண்மை உறுதி செய்யப்படும்.

> முதற்கட்டமாக கோவையில், குழந்தைகளுக்கான திறன்பயிற்சிக் கூடம், ஆலோசனை அறைகள், நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, மருத்துவப் பரிசோதனை அறை, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளுடன் கூடிய ஒரு மாதிரி இல்லம் பூஞ்சோலை என்ற பெயரில் அமைக்கப்படும்.

> இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு 7,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE