தனியார் பங்களிப்புடன் சென்னை நதிகள் சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழக பட்ஜெட் 2024-25-ல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2024-25-ஆம் ஆண்டில், சென்னை நதிகளை அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

> கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 1,328 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவுற்று 1,659 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினைச் செயல்படுத்திட, வரும் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அம்ருத் 2.0 திட்டத்தில் 4,942 கோடி ரூபாய், மத்திய அரசு பங்களிப்புடனும் 9,047 கோடி ரூபாய் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

>2024-25 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ நீளமுள்ள சாலைகள் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

> சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதுவரை, கடந்த 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,183 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு வரும் நிதியாண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

> சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பெற்ற (TDR) முறையில் அகலப்படுத்தும் திட்டம் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.

> சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் புதிய முயற்சியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. புதிய குடியிருப்புகள், புதிய உயர்தர சிகிச்சைப் பிரிவு, புதிய கட்டிடங்கள், புதிய தளங்கள், தொழிற்பயிற்சி நிலையம், ஏரிகளை சீரமைத்தல், பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.

> சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த கனவுத் தொழிற்சாலையில், VFX, Animation மற்றும் LED Wall போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான (Post Production) கட்டமைப்புகள் மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் (Public-Private Partnership) அமைக்கப்படும்.

> சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிகளான அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றைச் சீரமைத்திட இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

> அடையாற்று ஆற்றின் இரு கரைகளிலும் 70 கி.மீ தூரத்துக்கு கழிவுநீர்க் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது, நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் 4 பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நதிகரை நெடுக பசுமைப் பரப்புகளை அதிகரிப்புது போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலக்கட்டத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும்.

> சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள்ளாகவே இப்பணிகள் முடிக்கப்படும்.

> மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோவையில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுப் பணிகள் மற்றும் திட்ட அறிக்கை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

> பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்ப்புர பசுமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

> தமிழகத்தில் தற்போது 12 மாநகராட்சிகளில் சோதனை அடிப்படையில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் பல்வேறு நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதே அடிப்படையில், மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் 2024-25 ஆம் நிதியாண்டில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் விரிவுப்படுத்தப்படும்.

> சென்னை மாநகராட்சியில் பொதுக்கழிப்பறைகளை நவீனமுறையில் சீரமைத்து வடிவமைத்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகளைக் கட்டுதல் பணிகளுக்காக அரசு தனியார் பங்களிப்புடன் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே முறையில் இந்த ஆண்டில், கோவை, திருச்சி மற்றும் சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் 1,517 கோடி ரூபாய் மதிப்பில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இந்நிலையம் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

> 2007-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,890 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் பயன்பெறுவதோடு, தொழில் வளர்ச்சிக்கும் உதவும்.

> பெரம்பலூர் நகராட்சியிலுள்ள சுமார் 65,000 மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்கும் பொருட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்துக்குத் தேவையான நீரை வழங்கும்பொருட்டு, ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 216 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 358 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்டு திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 425 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு புதிய கூட்டுக் குடிநீர்த்திட்டம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

> இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE