7 இலக்குகளுடன் தமிழக பட்ஜெட் 2024-25: அமைச்சர் தங்கம் தென்னரசு விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும், இந்த 7 இலக்குகளை முன்வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் அமையப் பெற்று இருக்கிறது” என்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அவர் தனது அறிமுக உரையில், “2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை, நூற்றாண்டு கண்ட இந்த சட்டமன்றப் பேரவையின் முன்வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

இந்திய திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், இந்த வரவு செலவு திட்டத்தை உருவாக்குவதில் தொடர் வழிகாட்டுதல் வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனைத் திட்டங்களின் வரிசையில், நமது முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்துக்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் இந்த சட்டமன்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் தன் நினைவுப் பேழையில் என்றென்றும் குறித்து வைத்துக் கொள்ளும்.

காலத்தை வென்று நிலைத்து நிற்கும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களால்தான், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் கம்பீரமாகப் பயணித்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வு குறித்த அளவற்ற கருணையும், அந்நோக்கத்தை நிறைவேற்றிடத் தேவையான நிதி ஒதுக்கீடும் முறையாக அமைந்ததால் நமது மாநிலம் முன்னேற்றத்தை அடையத் தொடங்கியது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கிட வழிகாட்டியாக அமைந்தவை அறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான். நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்த அண்ணா 1967-68 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது "இந்த வரவு செலவுத் திட்டத்தில் மூன்றரை கோடி மக்களுடைய வாழ்வும், தாழ்வும் இந்த 64 பங்கங்களில் அடங்கியிருக்கின்றன. நம்முடைய இதயமும், அதிலே கலக்கப்பட்டிருக்கிறது. நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் லட்சியங்கள் இதில் அடங்கியிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணாவின் அறிவுரைகளைத் தாங்கியே, இந்த வரவு செலவுத் திட்டத்தை வெறும் புள்ளிவிவர குவியலாக இல்லாமல், கடைக்கோடி தமிழர்களின் எண்ணங்களின் அறிவிப்பாக மாற்றிட முயன்றுள்ளோம். மேலும், பல்வேறு எதிர்பாராத நெருக்கடிகளுக்கே எதிரே, தமிழகத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டிய சூழலில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆழிசூழ் தமிழ் நிலப் பரப்புக்குள், அழையா விருந்தினர் போல் அவ்வப்போது வருகைதந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கைப் பேரிடர்கள் ஒருபுறம். கூட்டாட்சித் தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் மத்திய அரசு மறுபுறம். இதற்கிடையே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு - செலவுத் திட்டத்தை உருவாக்கிய வேண்டிய தேவை எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மட்டுமே கலங்கரை விளக்கமாய் எங்களுக்கு அமைந்தன.

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" எனச் செயல்பட்டு வரும் நமது முதல்வர் தலைமையிலான இந்த அரசுக்கென ஒரு மாபெரும் தமிழ்க்கனவு உண்டு. வானவில்லின் வண்ணங்களைப் போன்று 7 முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க்கனவு அது. சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும், இந்த 7 இலக்குகளை முன்வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் அமையப் பெற்று இருக்கிறது" என்று அவர் கூறினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE