காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மநீம போட்டி?

By செய்திப்பிரிவு

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமக, ஐஜேகேயுடனான கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. இதையடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான திரைமறை பேச்சுக்களும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கமல்ஹாசன் நெருக்கமாக பயணித்து வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி நிலைபாட்டை இதுவரை கமல் அறிவிக்கவில்லை.

இதனிடையே திமுகவில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுதொடர்பாக மநீம செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, "கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவி, ஒரு தொகுதி கேட்கிறோம் என நாள்தோறும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்பி வருகின்றனர். விரைவில் கட்சி நிலைப்பாடு குறித்து தலைவர் அறிவிப்பார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE