மேல்மா சிப்காட் விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு உருவபொம்மையை எரித்து போராட்டம்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பொய்யான தகவலை கூறியதாக தெரிவித்து அமைச்சர் எ.வ.வேலுவின் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து கடந்த ஏழு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது செய்யாறு உட்கோட்ட காவல் துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக போராடுவதாக கூறி, 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 7 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘நிலம் இல்லாதவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என கருத்து தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் மற்றும் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து, அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நிலம் இருப்பதை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாரா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில், செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சட்டப்பேரவையில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என பொய்யான கருத்தை தெரிவித்த அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE