கைநழுவியதா கரும்பு விவசாயி சின்னம்? - ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாக சீமான் தகவல்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் சீமான் பேசும்போது,"மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக இன்னும் வெகு சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஓரிரு நாட்களில் அனைத்து தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஒரு வாரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என்ஐஏ சோதனையை எதிர்கொள்ளும் வலிமையும் ஆற்றலும் நாம் தமிழர்கட்சிக்கு இருக்கிறது. இடையூறு ஏற்படுத்தவே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. ஆணையத்துடன் பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தாலும் நீதிமன்றத்தை அணுகுவோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேர்தல் அறிக்கை தயாரிக்க இப்போது தான் கருத்து கேட்கின்றனர். 39 தொகுதிகளிலும் உள்ள உறுப்பினர்களுக்கு மக்களின் பிரச்சினை கூட தெரியாதா. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்ற திமுகவின் பிரச்சாரம், மக்கள் நீதி மய்யம் கட்சி உதயம் போன்ற காரணங்களால் வாக்குகள் பிரிக்கப்பட்டன.

இவையெல்லாம் சேர்த்தால் நாம் தமிழருக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தால் 0.7 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. மேகே தாட்டு அணை கட்டுவோம் என தேர்தல் வாக்குறுதியளித்த போதும், திமுக காங்கிரஸுக்கு ஆதரவளித்தது. அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதியை வெளியிட வேண்டும்.

மக்கள் போராட்டத்தை மதிக்கும் ஆட்சியாளர்கள் இல்லை. கோயிலுக்குச் செல்லும் பிரதமர் போராடும் விவசாயிகளை கவனிக்க மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் காளியம்மாள்: இதற்கிடையே, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE