டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, தஞ்சாவூரில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். வேளாண்விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரும், மத்திய அரசின் மின்வாரிய ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற விவசாயிகள், மாநிலஎல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுஉள்ளனர்.

இதனால், விவசாயிகள் ஆங்காங்கே டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். இதன்படி,தஞ்சாவூரில் நேற்று பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு திரண்ட விவசாயிகள், மத்தியஅரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ரயில் நிலையத்துக்குள் நுழையமுயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்தனர். ஆனால், விவசாயிகள் போலீஸாரை மீறிக் கொண்டு செல்லமுயன்றதால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனினும், போலீஸாரையும், அவர்கள் வைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் ரயில் நிலையத்தின் உள்ளே சென்று திருச்சி - சென்னை சோழன் விரைவுரயிலை மறித்து 20 நிமிடங்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பழனியப்பன் மற்றும் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE