“பாஜகவின் வெற்றி... நாட்டின் தோல்வி” - கனிமொழி எம்.பி. கருத்து

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாஜகவின் வெற்றி நாட்டின் தோல்வி என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ மக்களவை தொகுதி பிரச்சார கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு மசோதாவிலும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. பழமையான மொழி தமிழ் என ஒவ்வொரு இடத்திலும் பிரதமர் சொல்வதாக பாஜகவினர் சொல்கிறார்கள். ஆனால் அந்த பழமையான மொழியின் வளர்ச்சிக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை.

தென்னாட்டுக்கு எதிராக ஒவ்வொரு திட்டத்தையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. ஜி எஸ் டி வரி மூலம் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி கொடுக்கப் படுகிறது. ஆனால் உத்தர பிரதேசத்துக்கு 2 ரூபாய் இரண்டு பைசா என அதனை இரு மடங்காக்கி வட்டியுடன் கொடுக்கிறார்கள். கேட்டால் முன்னேற வேண்டிய மாநிலம் உத்தர பிரதேசம் என சொல்கிறார்கள். பல தடைகளை மத்திய அரசு செய்தும், போதுமான நிதி ஒதுக்காமல் இருந்தும் தமிழகத்தை பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக முதல்வர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்.

நிதி ஒதுக்கவில்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துபெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதுவரை மத்திய அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படியே தமிழக அரசின் நிதி மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. நாட்டுக்கே உணவு அளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தும் ஆட்சி தான் மத்தியில் உள்ளது.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு முறையாக நிதி ஒதுக்கப்பட வில்லை. இண்டியா கூட்டணி வெற்றி பெறும் நாளே இந்தியா வெற்றி அடையும் நாளாகும். பாஜகவின் வெற்றி நாட்டின் தோல்வி என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, ‘‘கடந்த 6 மாதமாக தமிழகத்துக்கு மத்திய அரசால் ஜிஎஸ்டி பகிர்வுத் தொகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ரூ. 20ஆயிரம் கோடி நிதியை ஜி.எஸ்.டியில் இழந்திருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான், ஞான திரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநில மகளிரணி செயலர் ஹெலன்டேவிட்சன், திருநெல்வேலி மேயர் பி.எம். சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE