“ஒரு தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை வெற்றி பெறுவாரா?” - துரை வைகோ சவால்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவாரா? என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சவால் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற வேலூர் மண்டல மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதன்மை செயலாளர் துரை வைகோ, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அவரது 10 ஆண்டுகள் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளை நசுக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தது. சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்து விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும் என பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், புதுடெல்லியை நோக்கி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியது. இதற்கு, ஹரியானா நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2024-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக அரசுக்கு விவசாயிகள் உள்ளிட்டோர் தக்க பாடம் புகட்டு வார்கள் என நம்புகிறோம்.

மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் காங்கிரஸ் அரசும், இதற்கு முன்பு இருந்த பாஜக அரசும் நடந்து கொள்கிறது. காவிரி உரிமையை தமிழகத்துக்கு கொடுப்பது போல தெரிய வில்லை. தமிழக மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து பாஜகவுடன் இணைந்து அதிமுகவும் கையெழுத்திட்டுள்ளது. பாஜக மீது எதிர்ப்பு மனப்பான்மையை அதிமுக எடுத்துள்ளது.

இது தொடர வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து 60 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைக்கவில்லை. காஸ் சிலிண்டர் விலையும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால், நாடு முழுவதும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் பாடுகள், அறிக்கைகள் உள்ளிட்டவை மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

முரண்பாடான அறிக்கைகளை கொடுப்பது, தவறான தரவுகளை கொடுப்பது போன்ற செயல்களால் பாஜகவும் ஏமாற்றம் அடையும். தமிழகத்தில் ஒரு தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? என சவால் விடுக்கிறேன். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது, எழுச்சி பெற்றுள்ளது என திராவிட கட்சிகளை விமர்சிக்கும் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போது தான் அவருக்கும், அவர் சார்ந்துள்ள மதவாத பாஜகவுக்கு மக்கள் ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என தெரியவரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE