விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர்.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது.

அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

முதல்வர் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17-02-2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE