உதகையில் தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: தொட்டபெட்டா சிகரத்தை தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கண்டுகளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. நீலகிரி மாவட்டம் உதகைக்கு 3 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கடந்த 15-ம் தேதி வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கியுள்ள அவர் நேற்று தோடரின பழங்குடியினரின் தலைமை மந்தான முத்தநாடு மந்துக்கு விஜயம் செய்தார். அங்குள்ள பழங்குடியினரின் கோயில்களில் வழிப்பட்டவர், அம்மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். இந்நிலையில், இன்று காலை தனது மனைவி லட்சுமி உறவினர்களுடன் இந்தியாவின் உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்தார்.

தொட்டபெட்டாவுக்கு வந்த ஆளுநரை சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன் வரவேற்றார். தொட்டபெட்டா சிகரத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் சீகூர், குன்னூர், மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்குகள், உதகை நகரம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். பின்னர் தொட்டபெட்டா காட்சி முனைக்கு சென்றவர்கள். அங்கிருந்து பைனாக்குலர் மூலம் உதகை நகரை கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், காட்சி முனை பகுதிக்கு சென்ற ஆளுநர், அங்கு பாறைகள் மீது நடக்கும் போது, அவரது ஷூ வழுக்கியதால் நிலை தடுமாறினார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், தனது உறவனிர்களிடம் காலணியை காண்பித்து, பாறைகள் மீது ஏற இத்தகைய காலணிகளை அணிய கூடாது எனத் தெரிவித்தார். காட்சிமுனையில் சிறிது நேரம் கண்டு ரசித்தார். பின்பு, தொட்டபெட்டா தொலைநோக்கி மையத்தில் தேனீர் அருந்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆளுநர் வருகை முன்னிட்டு தொட்டபெட்டா சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அனுமதிக்க படாததால் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் காத்திருந்தனர். தொட்டபெட்டாவிலிருந்து திரும்பிய ஆளுநர் உதகை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கல் பங்களாவை பார்வையிட்டார். அங்கு இயங்கி வரும் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்தவர்கள் ராஜ்பவன் திரும்பினர். இந்நிலையில், ஆளுநர் நாளை தேயிலை பூங்காவை பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்புகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE