“சிறந்த நகைச்சுவை பேட்டி...” - நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதைவிட சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது" என்று சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எல்லார்க்கும் எல்லாம் என்ற வார்த்தைக்குள் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையினரும் உண்டு. அனைவரும் உண்டு. திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது.

இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில், பேட்டி அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஒருவர், 'பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்' என்று சொல்லி இருக்கிறார். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது. பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக திமுக அரசு உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு திமுக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

சிறுபான்மை மக்களாகிய நீங்கள் அச்சமற்று வாழும் அமைதிச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அமைதியான சூழலை உருவாக்கித் தருவதே நல்லாட்சியின் இலக்கணம் ஆகும். அத்தகைய இலக்கணப்படி நடைபெறும் இந்த அரசுடன் இஸ்லாமிய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை பரிசீலித்து, படிப்படியாக நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணா தன்னுடன் யாரை இணைத்துக் கொண்டார் என்றால் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களைத்தான்.

சிறுபான்மையினர் அமைப்புகள் சேர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவை நடத்தியபோது, 'என்னை உங்களில் இருந்து பிரித்துப் பார்த்து நன்றி சொல்லாதீர்கள், நான் என் கடமையைத் தான் செய்தேன்' என்றார். அத்தகைய எண்ணம் கொண்டு தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மொழியால் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து, மாநிலத்தையும் வளர்த்து, இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம்" என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE