சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கான குடிநீரின் அளவை குறைக்கும் கேரள அரசு

By செய்திப்பிரிவு

கோவை: சிறுவாணி அணையில் இருந்து விநியோகிக்கப்படும், குடிநீரின் அளவை தினமும் கேரள அரசுகுறைத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது.

சிறுவாணி அணையில் இருந்துவரும் தண்ணீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, வழியோரம் உள்ள 22 கிராமங்கள், மாநகராட்சியின்30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சிறுவாணி அணையில் இருந்து முன்பு சராசரியாக 80 முதல் 90 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) அளவுக்கு குடிநீர் பெறப்பட்டது. ஆனால், கடந்த மாதம் இறுதியில் அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டது.

மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்த புள்ளிவிவரப்படி, சிறுவாணி அணையில் இருந்து கடந்த மாதம் 25-ம் தேதி 73.23 எம்.எல்.டி, 27-ம் தேதி 57.60 எம்.எல்.டி, 28-ம் தேதி 38.80 எம்.எல்.டி, பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 38.66 எம்.எல்.டி, 10-ம் தேதி 37.22 எம்.எல்.டி அளவுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு மேலும் குறைந்து, நேற்று சிறுவாணி அணையில் இருந்து 35.68 எம்.எல்.டி மட்டுமேகேரள அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘மாநகரில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் பெறப்படுகிறது.

ஏற்கெனவே சீரான முறையில் குடிநீர் விநியோகம் இல்லை. இச்சூழலில் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் தொடர்ந்து குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரிகள் கூறும்போது,‘‘சிறுவாணி அணையில் மொத்தம் 49.50 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கலாம் என்றாலும், கேரள அரசால் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. கடந்த 1-ம் தேதி 26.17 அடி, 10-ம் தேதி 25.25 அடி அளவுக்கு இருந்த நீர்மட்டம், நேற்று 24.60 அடியாக குறைந்துள்ளது. அதேநேரம் கேரள அரசால் நமக்கு விநியோகிக்கப்படும் அளவும் குறைந்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம். பில்லூர் 1, 2, 3 போன்ற மாற்று குடிநீர் திட்டங்கள் மூலம் தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும்போது,‘‘சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு , கேரள அரசு நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் சூழலை விளக்கியுள்ளது. இதை நாங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் தமிழக அரசு அறிவுறுத்தினால் நேரில் சென்றும் கேரள அரசை வலியுறுத்துவோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE