மதுரையில் போட்டியிட திமுக ஆர்வம் காட்டாதது ஏன்?

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நகராக மதுரை திகழ்கிறது. இத்தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2024 தேர்தலில் இத்தொகுதி யில் திமுக போட்டியிட வேண்டும் என்ற கருத்தை அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் அண்மையில் சென்னையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமையிடம் தெரிவித்தனர்.

ஆனால், யாருக்கு இத்தொகுதியை ஒதுக்குவது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்து உரிய நேரத்தில் அறிவிக்கும் என்ற பதிலே கிடைத்தது. சு.வெங்கடசேன் எம்.பி. மக்கள வையிலும், பொது வெளியிலும் அரசியல் ரீதியாக பாஜகவையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனால் முதல்வர் ஸ்டாலினின் நன்மதிப்பை பெற்றுள்ள சு.வெங்கடேசனுக்கு 2-வது முறையாக மதுரையில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக திமுக நிர்வாகிகளே கூறுகின்றனர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் திமுக வேட்பாளரை நிறுத்த கட்சி மேலிடம் ஆர்வம் காட்டுவதில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிவிடுகிறது. 2009 -ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக மு.க.அழகிரி கள மிறங்கி வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார். தற்போதுள்ள அமைச்சர்கள் இருவரும், தங்களை மீறி கட்சியில் மற்றவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.

அதனால்தான், அவர்கள் தங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகளை எம்.பி.யாக்க முயற்சிப்பது இல்லை. கட்சி மேலிடமும் பெரிய அளவில் அழுத்தம் கொடுப்பதில்லை. இதனால் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE