பட்ஜெட்டில் அரசாணை 354 குறித்த அறிவிப்பை வெளியிடுக: அரசு மருத்துவர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: பிப்ரவரி 19ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்த அரசாணை எண் 354-ஐ (GO. 354) நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது, அரசு மருத்துவர்களின் நலனுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் உள்ளோம். எனவே இந்த ஆண்டாவது பட்ஜெட்டில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட முதல்வர் ஸ்டாலினை வேண்டுகிறோம்.

அரசாணை 354.ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை தரப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர் பணியிடங்கள் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்.

வழக்கம் போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டின் போதும், தமிழகத்தில் சுகாதாரத் துறையின் சாதனைகளை பட்டியல் இட்டு பேசுவார்கள். அதேநேரத்தில் இந்த ஆண்டாவது முதன்முறையாக சுகாதாரத் துறையின் இதயமாக உள்ள அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

கடந்த 10, 15 ஆண்டுகளில், முன்பு இருந்ததைவிட, நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பு பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதைப்போல தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆனால் இங்கு அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டும், 13 ஆண்டுகளுக்கு பின் தங்கியும், நாட்டிலேயே மிகக் குறைவாகவும் உள்ளது.

மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு மாத ஊதியம் தரப்படுகிறது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, சட்டசபையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், சின்னத்துரை, சிந்தனை செல்வன் மற்றும் எம்.ஆர்.காந்தி ஆகியோர், அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். இருப்பினும் அது குறித்து இன்று வரை அமைச்சர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

தமிழக சுகாதாரத் துறையில் எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் இங்கு போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரமும், ஊதியமும் தரப்பட வேண்டும் என்ற இந்த இரண்டு விசயங்களை புறக்கணித்து விட்டு சுகாதாரத் துறையை வலுப்படுத்த முடியாது என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.

திமுக ஆட்சி பதவியேற்ற போது, கரோனா தொற்றின் உச்சத்தால், முதல் சட்டமன்ற கூட்டத் தொடரையே வழக்கமான தலைமைச் செயலகத்தில் நடத்த முடியாமல், கலைவாணர் அரங்கில் நடத்தியதை இந்த நேரத்தில் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும். இருப்பினும் அந்த கடினமான தருணத்தில் உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களின் கோரிக்கையை, நிறைவேற்ற மறுப்பதை முதல்வர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புகிறோம்.

அதுவும் அரசாணைப்படி உரிய ஊதியத்தை தருவதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக வெறும் 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் கரோனாவுக்கு பிறகு கூட மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கவில்லை என்றால், இது நிச்சயம் மிகப்பெரிய வரலாற்று பிழையாகவே அமையும் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்து 4 ஆண்டுகளும் கடந்து விட்டது. இருப்பினும் எந்த கோரிக்கைக்காக அவர் தன் உயிரை கொடுத்தாரோ, அந்த கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

அதைப்போல கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு கருணை காட்டவில்லை. மேலும் தனக்கு அரசு வேலை வேண்டி, திவ்யா விவேகானந்தன் முதல்வருக்கு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பிறகும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.

எனவே தமிழக முதல்வர் இந்த பட்ஜெட்டில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட நாம் வேண்டுகிறோம். இதன் மூலம் அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழி வகுப்பதோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE