சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தெலங்கானாவில் சமூகநீதியை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தெலங்கானாவில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பிஹாரைத் தவிர்த்து கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மூன்று தென்னிந்திய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நிலையில், அதற்கான முதல் படியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்காதது கண்டிக்கத்தக்கது.

தெலங்கானா சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்த அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், ‘தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற நலிவடைந்த மக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். இதே காரணங்களுக்காகத் தான் தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

எனினும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறிவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி தமது கடமையை முடித்துக் கொள்கிறார். முதல்வரின் இந்த நிலைப்பாடு கடலில் அலை ஓய்ந்த பிறகு மீன் பிடிப்போம் என்பதற்கு ஒப்பானது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு தவறானது என்பதை, அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு என்பது உண்மை தான். ஆனால், மாநிலங்களில் உள்ள சூழலுக்கு ஏற்றவாறு மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கணக்கெடுப்பை நாங்கள் நடத்துகிறோம்’’ என்றும் பிரபாகர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்பதற்கு தெலங்கானா அமைச்சரின் கருத்தை விட சிறந்த சான்று தேவையில்லை.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் மிகவும் அதிகமாக இருக்கின்றன. சமுகநீதியின் தொட்டில் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டாலும் கூட, தமிழகத்தில் தான் இன்னும் இட ஒதுக்கீடு பரவலாக்கப் படவில்லை. கேரளத்தில் ஓபிசிகளுக்கான 40% இடஒதுக்கீடு 8 பிரிவுகளாகவும், கர்நாடக மாநிலத்தில் 32% ஓபிசி ஒதுக்கீடு 5 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 29% இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாகவும் பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு கடந்த 35 ஆண்டுகளாக இரு பிரிவுகளாக மட்டுமே பிரித்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் அதிக சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து தமிழகத்தில் ஓபிசி ஒதுக்கீடு ஒரே பிரிவாகத் தான் இருந்து வந்தது. எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாகத் தான் 1989 ஆம் ஆண்டில் அது இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போதே அண்டை மாநிலங்களில் உள்ளவாறு ஓபிசி ஒதுக்கீட்டை 6 பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், அப்போது அதை அரசு செய்யவில்லை. இப்போதாவது அதை செய்வதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கட்டாயமாகும்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை 69% க்கும் அதிகம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமாகும். இவை தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள், சொந்த வீடு இல்லாத குடும்பங்கள், கல்வியறிவு பெற்ற குடும்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தமிழ்நாட்டில் துல்லியமாக இல்லை. இவற்றைத் துல்லியமாக திரட்டுவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரே தீர்வு ஆகும்.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்த அளவுக்கு இருக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பயன்கள் வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டன. அதே பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிடுவதுடன், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்