பாஜக மீது கடும் அதிருப்தி: திமுக கூட்டணியில் இணைகிறாரா கிருஷ்ணசாமி?

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா ஆகியோரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்திக்கவில்லை. தென்காசி தொகுதி கள நிலவரத்தால் திமுக கூட்டணி பக்கம் கிருஷ்ணசாமி சாய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியை 1996-ம் ஆண்டு தொடங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி, தென் மாவட்டங்களை மையப்படுத்தியே தனது அரசியல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். தென்காசி மக்களவைத் தொகுதியில் 1998 முதல் 1999, 2004, 2009, 2014, 2019 வரை தொடர்ச்சியாகப் போட்டியிட்டு ஒருமுறைகூட அவரால் வெற்றிக் கனியைச் சுவைக்க முடியவில்லை. இந்தத் தொகுதியில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து தலா ஒரு முறையும், 3-வது அணி சார்பில் ஒரு முறையும், இருமுறை தனித்தும் போட்டியிட்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்திய கிருஷ்ணசாமி தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை முழுநேர அரசியலுக்கு கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தென்காசி தொகுதியில் நடந்த பல்வேறு போராட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் ஷியாம் கலந்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக பாஜக உடன் இணைந்து செயல்பட்டு வந்த கிருஷ்ணசாமி, ஆர்எஸ்எஸ் மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், தான் பாஜகவுடன் அல்ல ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறி வந்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணமாக தென்காசி வந்தபோது, அவருடன் கிருஷ்ணசாமியும் கலந்துகொண்டார். மேலும், பாஜகவின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கிருஷ்ணசாமி தவறாமல் கலந்துகொண்டு வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதமே தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த புதிய தமிழகம் கட்சியின் 27-வது ஆண்டு மாநாட்டில் தனது மகன் ஷியாமை இளைஞரணி தலைவராக நியமித்தும், புதிய தமிழகம் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார் கிருஷ்ணசாமி. அதிமுக, பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டபோது இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியவர்களில் கிருஷ்ணசாமி முக்கியமானவர். தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான 'ஸ்டார்ட் அப் பிரிவு' மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் சங்கரன்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்ற அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை மிகப்பெரிய மாநாடு போல் நடத்திய ராஜலட்சுமி தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.

இந்த இரு கட்சிகளின் சார்பிலும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதை அறிந்து கிருஷ்ணசாமி அதிர்ச்சி அடைந்தார். இதனால் கடந்த மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடியை கூட்டணிக் கட்சியினர் சந்தித்த நிலையில், கிருஷ்ணசாமி சந்திக்கவில்லை. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் நட்டா சென்னை வந்தபோதும் அவரை சந்திக்க கிருஷ்ணசாமி செல்லவில்லை. மேலும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றும் கோரிக்கையை நிறைவேற்றாமல் பாஜக தவறிழைத்து விட்டது என கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.

இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ''பாஜகவுக்கு கொள்கை ரீதியில் புதிய தமிழகம் முழு ஆதரவை அளித்து வந்தது. மக்களவைத் தேர்தலில் இரு இடங்கள் கேட்ட நிலையில் முக்கிய தொகுதியான தென்காசி தொகுதியில் அண்ணாமலை ஆதரவில் பாஜகவினர் தேர்தல் பணியாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE