சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.16) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம்.
அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி மக்களைத் தேடி மருத்துவம்,ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக் கொண்டே போகமுடியும். இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களாக அமைந்திருக்கின்றன.
இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கிற இந்த மகத்தான திட்டம். இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். “மக்களிடம் செல் - மக்களோடு வாழ் - மக்களுக்காக வாழ்” என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் – மறைந்த முதல்வர் கருணாநிதியும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம்.
» ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவிப்பு
» காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: பாஜக மீது கார்கே, ராகுல் சரமாரி தாக்கு
ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற இந்தத் திட்டம்.
அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது.
மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதை முழுமையாக போக்கவேண்டும் என்பதற்காகதான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக “மக்களுடன் முதல்வர்” என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18-12-2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம்.
தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகள முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.
முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.
இது தொடர்பாக, மேலும் சில புள்ளிவிவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது. கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள். எல்லா மாவட்டங்களிலும், மேற்படி முகாம்களில் அளித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அந்த பயனாளிகளுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன். பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்தச் சிறப்பு முகாம்கள் மூலமாக முடிவுற்றதை பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறது.
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது. இதற்கு காரணமான அமைச்சர்களையும், அனைத்து அரசு அதிகாரிகளையும் நான் நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்” என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago